தென்ஆப்பிரிக்காவை குறைந்த ரன்னில் சுருட்டி இந்திய அணி சாதனை!

0
531
ICT

ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதி வருகிறது. இந்தத் தொடரின் முதலில் நடந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று இருக்க தொடர் சமநிலையில் இருந்தது!

இன்று தொடரை நிர்ணயிக்கும் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென்ஆப்பிரிக்க அணியில் கேசவ் மகாராஜ், ரபாடா, நெகிடி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பெலுக்வாயோ, பார்ச்சூன், யான்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். வாஷிங்டன் சுந்தரை வைத்து பந்து வீச்சு தாக்குதலை ஆரம்பித்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது. அவர் குயின்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வேகப்பந்து வீச்சில் மிரட்டிய முகமது சிராஜ் ஜே மலான் மற்றும் ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் ஆகியோரது விக்கெட்டை பவர் பிளேவில் கைப்பற்றினார்.

அடுத்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. எய்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றி கிளாசன் ஆகியோரது விக்கெட்டை இளம் வீரர் ஷாபாஸ் அகமத் கைப்பற்றினார். இதற்கடுத்து திரும்பிவந்த வாஷிங்டன் சுந்தர் தென் ஆப்பிரிக்காவின் அபாயகரமான பேட்ஸ்மேன் டேவிட் மில்லரை கிளீன் போல்ட் செய்து வழியனுப்பினார்.

இதற்கு அடுத்து பெலுக்வாயோ, பார்ச்சூன், நோர்க்கியா மற்றும் யான்சென் ஆகிய கடைசி 4 விக்கட்டுக்களையும் மிகச் சிறப்பாக பந்து வீசி குல்தீப் யாதவ் கைப்பற்ற, தென் ஆப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு சுருண்டது.

இதற்கு முன் இந்திய அணியுடன் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 1999ஆம் ஆண்டு நைரோபியில் 117. அடுத்து 2018 ஆம் ஆண்டு செஞ்சூரியன் மைதானத்தில் 118. கடந்த நூற்றாண்டில் இந்திய அணிக்கு எதிராகப் படைத்திருந்த மோசமான சாதனையை தென்ஆப்பிரிக்கா அணி தற்போது உடைத்துக் கொண்டிருக்கிறது.

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் ஹென்றி கிளாசன் அதிகபட்சமாக 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் 4.1 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் செய்து 18 ரன்கள் விட்டுக் தந்து 4 விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் கைப்பற்றினார். இந்திய அணியில் ஆரம்பக்கட்ட வேகப்பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்தது. இந்த ஆட்டத்தில் முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் விக்கெட்டுகள் ஏதும் கைப்பற்றாத ஆவேஸ் கான் 5 ஓவர்கள் பந்துவீசி அதில் ஒரு மெய்டன் செய்து 8 ரன்கள் மட்டுமே விட்டு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.