“இந்தியாவின் பவுலிங் தரமற்றது; இன்னும் பல தோல்விகள் அடைவார்கள்” – பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

0
196

இந்திய அணியின் பவுலிங் முற்றிலும் தரமற்றது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார் டேனிஸ் கனேரியா.

வங்கதேச அணியுடன் நடந்த முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்து தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்திருக்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற டிசம்பர் 10ஆம் தேதி நடக்க உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 69 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்திருந்தது. அதன் பிறகு மகமதுல்லா மற்றும் மெகதி ஹாசன் இருவரும் ஜோடி சேர்ந்து அணியின் கோரை உயர்த்தினர். இந்த ஜோடி ஏழாவது விக்கெட் இருக்கு 148 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை களத்தில் நின்ற மெகதி ஹாசன் சதம் அடித்தார்.

ஒரு கட்டத்தில் 100 ரன்கள் தாண்டுவதே கடினம் என இருந்தபோது, நல்ல பாட்டன்ஷிப் அமைத்து வங்கதேச அணி 271 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு இந்திய அணி இறுதிவரை போராடியும் அந்த ஸ்கொரை சேஸ் செய்ய முடியவில்லை. வங்கதேச அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியில் இந்திய அணியின் பௌலிங் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா, இந்தியாவின் பவுலிங் முற்றிலும் தரம் அற்றது என்று விமர்சித்து இருக்கிறார்

“நான் விமர்சிப்பது பலருக்கும் கடுமையாக தெரியலாம். ஆனால் அதுதான் உண்மை. இந்திய அணியின் பவுலிங் மூன்றாம் தரமாக இருந்தது. நாளுக்கு நாள் இந்திய கிரிக்கெட் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று புரியவில்லை. வங்கதேச மைதானம் இந்திய மைதானத்தை போலவே இருக்கும். ஆகையால் இந்திய அணி நிச்சயம் எளிதாக வென்றிருக்கலாம். வெளிப்படையாக தெரிந்தது, இந்திய அணியின் பவுலிங் எவ்வளவு மோசமாக இருந்தது என்று.

ஆறு விக்கெட் எடுக்க தெரிந்த இந்திய பவுலர்களுக்கு மீதம் இருக்கும் விக்கெட்டுகளை எளிதாக எடுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக இது போன்ற தோல்விகள் பும்ரா, சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இல்லாததால் நடந்திருக்கிறது என்று கூற முடியுமா? முழுமையாக இந்திய அணி இவர்களை நம்பி மட்டுமே இருக்கின்றதா?.” என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

மேலும் முகமது சிராஜ் பற்றி பேசிய அவர், “ஆக்ரோஷமாக பந்து வீசுகிறார் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். அதே நேரம் அதிக ரன்களையும் விட்டுக் கொடுக்கிறார். பவுலிங்கில் ரன்களை கட்டுப்படுத்தலாம் வெறுமனே விக்கெட் மட்டுமே வீழ்த்தினால், பேப்பரில் மட்டுமே அந்த சாதனை தெரியும். அணியின் வெற்றிக்கு உதவாது.” என கடுமையாக பேசினார்.