டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறார் இந்திய நட்சத்திர வீரர்- பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
3909
ICT

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இத்தோடு 4 ரிசர்வு வீரர்களும் அறிவிக்கப்பட்டார்கள்!

இந்த நேரத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வந்தது. இந்தத் தொடரில் ஹர்ஷல் படேல் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் காயத்தால் இடம்பெறவில்லை.

ஆசியக் கோப்பைக்கு அடுத்து இந்தியாவில் நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் உடனான டி20 தொடர்களுக்கு இவர்கள் இந்திய அணியில் தேர்வானார்கள்.

இவர்கள் இருவரில் ஹர்சல் படேல் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடர்களில் தொடர்ந்து விளையாட, ஜஸ்பிரித் பும்ராவின் முதுகு காயத்தின் பாதிப்பு தொடர, அவர் தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து விலகினார். மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பும்ரா தற்போது தேசிய கிரிக்கெட் அகடமியில் இருக்கிறார், அங்குள்ள பிசியோ மற்றும் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்து தான் எல்லாம் முடிவு செய்யமுடியும் என்று கூறியிருந்தார்.

தற்போது பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா வெளியேறுகிறார் என்று தெரிவித்துள்ளது. இவருக்கான மாற்று வீரர் சீக்கிரத்தில் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பும்ரா எப்படியும் அணிக்கு திரும்புவார் என்று காத்திருந்த இந்திய அணி நிர்வாகத்திற்கும் ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான செய்தியே!