சோகமாக அமர்ந்திருந்த சாஹின் அப்ரிடி; “என்னாச்சு.. என்னாச்சு” ஓடிச்சென்று நலம்விசாரித்த இந்திய வீரர்கள்- உருக்கமான வீடியோ!!

0
114

காலில் அடிபட்டு அமர்ந்திருந்த சாஹின் அப்ரிடியை இந்திய வீரர்கள் நலம் விசாரித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

15வது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்குகிறது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் துபாய் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடர் டி20 தொடராக இம்முறை நடத்தப்பட இருக்கிறது. துவக்க போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இரு அணிகளும், ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் நடக்கவிருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆசியகோப்பை தொடரில் இடம் பெறவில்லை. அவரது இடத்தை நிரப்ப சில இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்ந்த பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சாஹின் சா அப்ரிடி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விளையாடவில்லை. ஆனால் தனது காயம் குணமடைவதற்காக பாகிஸ்தான் அணியுடன் பயணித்து உடற்பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்திய வீரர்கள் உட்பட வேறு சில அணி வீரர்களும் துபாய் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். காயம் காரணமாக காலில் உபகரணங்கள் மாட்டிக்கொண்டு மைதானத்தின் ஓரமாக சாஹின் அப்ரிடி அமர்ந்திருந்தார். அந்த வழியாக சென்ற இந்திய வீரர்களுள் சிலர் அவரிடம் நேரே வந்து உடல்நலம் குறித்து விசாரித்தனர். பிறகு சிரித்துக்கொண்டு கைகுலுக்கி நகர்ந்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்திய வீரர்களுள் குறிப்பாக ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சஹல், ராகுல் விராத் கோலி ஆகியோர் சிறிது உரையாடல்களையும் அவருடன் நிகழ்த்தினர். இருவரும் சிரிப்புணர்வுடன் பகிர்ந்து கொண்டது இரு அணி ரசிகர்களுக்கும் பாடமாக இருக்கும். சமூக வலைதளங்களில் மட்டுமல்லாது மைதானங்களிலும் இரு அணி ரசிகர்களும் அவ்வபோது சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் வீரர்களும் மனஉளைச்சல்களுக்கும் உள்ளாகின்றனர். தற்போது பயிற்சியின் போது இரு அணி வீரர்களும் ஒருவருக்கு மற்றொருவர் நல்ல நட்புறவை பகிர்ந்து கொள்வதை இது போன்ற வீடியோக்களில் பார்ப்பது மனநிறைவை கொடுக்கிறது.

- Advertisement -

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பைத் தொடர் ஒருநாள் தொடராக நடத்தப்பட்டது. அதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிய கோப்பைத் தொடர் டி20 தொடராக நடத்தப்பட்டது. அதுவே முதல் முறையாகும். தற்போது இரண்டாவது முறையாக டி20 தொடராக ஆசிய கோப்பைத் தொடர் நடத்தப்படுகிறது. ஆசிய கோப்பை வரலாற்றில் இந்திய அணி ஏழு முறை கோப்பையை வென்றிருக்கிறது இதுவே அதிகபட்சமாகும். அடுத்த இடத்தில் இலங்கை அணி ஐந்து முறை வென்றிருக்கிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளிலும் முன்னணி பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெறாதது பின்னடைவை தந்தாலும், இளம் வீரர்கள் அவர்களுக்கு மாற்றாக வந்தது பலத்துடன் காணப்படுகின்றன என்பதும் கூடுதல் சிறப்பு.