“ஓபனிங் பண்ண இவரை முதல்ல டீம்ல எடுங்க இவர்தான் பிளாஸ்டர்” – தீப் தாஸ்குப்தா புதுக்கருத்து!

0
65
Deep Dasgupta

இந்திய அணி தற்போது புது கேப்டன் ரோகித் சர்மா, புதுப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் செயல்பாட்டின் கீழ் மீள் உருவாக்கத்தை, புதிய ஆட்ட அணுகுமுறை, புதிய அணி கலாச்சாரம் என்று செய்து வருகிறது. மாறிவரும் உலக கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு இந்திய அணியைத் தகவமைக்க முயற்சிகள் தொடர்கின்றன!

இந்திய டி20 அணி முன்பு முதலில் பேட் செய்து ஒரு நல்ல ஸ்கோரை கொண்டுவர தடுமாறியது, அதேபோல் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் டாப் ஆர்டரை சீக்கிரம் இழந்துவிட்டால் தடுமாற்றத்திற்கு உள்ளானது. தற்போது இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ரோகித்-டிராவிட் கூட்டணி பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்து பார்த்துக்கொண்டிருக்கிறது!

இந்தப் பரிசோதனை முயற்சிகளின் ஒரு அங்கமாக கே.எல்.ராகுல் அதிகம் காயத்தால் பாதிக்கப்படுவதால், முன்னெச்சரிக்கையாக அவருக்குப் பதிலாக ஒரு மாற்றுத் துவக்க ஆட்டக்காரரைக் கண்டறிவதற்காக, இஷான் கிஷான், ருதுராஜ், ரிஷாப் பண்ட், சூர்யகுமார் என பரிசோதித்து வருகிறது.

இது சம்பந்தமாக இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தீப் தாஸ்குப்தா புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் “வரும் டி20 உலகக்கோப்பைக்கு முதல் துவக்க ஆட்டக்காரர்களாக நான் ரோகித்-ராகுலையே பார்க்கிறேன். மூன்றாவது துவக்க வீரருக்கான ஸ்லாட்டில் வேறொரு வடிவத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட பிரித்வி ஷா சரியாக இருப்பார். அவர் விளையாடும் விதத்தில் உங்களுக்கு 70, 80 ரன்களையோ அல்லது சதத்தையோ தராமல் போகலாம்; ஆனால் அவரால் மிக வேகமான தொடக்கத்தைத் தர முடியும்” என்று கூறி இருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இஷான் கிஷான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நன்றாகவே செயல்பட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் அவரது சில ஆட்டங்கள், அவரது சிறப்பான செயல்பாட்டில் சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்றும் தெரிவித்தார்!

இந்திய கிரிக்கெட்டில் சச்சின் மட்டுமே ரஞ்சி மற்றும் துலீப் டிராபியின் அறிமுகப் போட்டியில் சதமடித்த வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராக இருந்தார். ஆனால் பிரித்வி ஷா ரஞ்சி மற்றும் துலீப் டிராபி மட்டும் இல்லாமல் சர்வதேச அறிமுகப் போட்டியிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற அரிய சாதனையை நிகழ்த்தியவர் ஆவார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 ஆட்டங்களில் 283 ரன்களை 152 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!