இந்திய உள்நாட்டு ரன் மெஷின் சர்பராஸ் கான் மீண்டும் அதிரடி சதம்!

0
2121
Sarfraz khan

இந்திய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான இரானி கோப்பை தொடர் தற்போது குஜராத் ராஜ்கோட் மைதானத்தில், சவுராஷ்டிரா, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையே இன்று தொடங்கி நடந்து வருகிறது!

சவுராஷ்டிரா அணிக்கு ஜெயதேவ் உனன்கட் கேப்டனாகவும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ஹனுமான் விகாரி கேப்டனாகவும் இருக்கிறார். இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஹனுமான் விகாரி முதலில் பந்து வீசுவது என்று தீர்மானித்தார்.

இதன்படி முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி 98 ரன்களுக்கு 24.5 ஓவர்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த அணியின் நட்சத்திர வீரர் புஜாரா 1 ரன்னில் ஆட்டம் இழந்தார் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தரப்பில் முகேஷ் குமார் 4 விக்கெட்டுகளையும், குல்தீப் சென் 3 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதையடுத்து களம் கண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் மயங்க் அகர்வால் இருவரும் ஏமாற்றினார்கள். அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துல்லும் ஏமாற்றினார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.

ஆனால் இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹனுமா விஹாரி மற்றும் உள்நாட்டு தொடர்களின் ரன் மெஷின் சர்பராஸ் கான் இருவரும் மேற்கொண்டு விக்கெட் விடாமல் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.

இதில் ஒரு முனையில் கேப்டன் ஹனுமா விஹாரி பொறுமையாக விளையாடி 145 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். ஆனால் இன்னொரு முனையில் விளையாடிய ரன் மெஷின் சர்பராஸ் கான் அதிரடியில் மிரட்டி எடுத்துவிட்டார். மொத்தம் 126 பந்துகள் விளையாடி 125 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் கேப்டன் ஹனுமா விஹாரியோடு நிற்கிறார். இதில் 19 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் ரஞ்சி மற்றும் துலிப் ட்ராபி தற்போது இரானி டிராபி என சர்ப்ராஸ் கானின் ஆட்டம் மிக அற்புதமாக இருக்கிறது. முச்சதம், இரட்டைச் சதம், சதம் என விளாசி தள்ளிக்கொண்டு இருக்கிறார். எப்படியும் அடுத்து பங்களாதேஷ் அணிவுடன் நடக்க இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது.