“ரிஷப் பண்ட் செய்ததை எந்தவொரு இளம் வீரர் செய்தும் நான் பார்த்ததில்லை” – இந்திய அணி முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்!

0
208
Sridhar

2020-21 காலக்கட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு டெஸ்ட் தொடர் விளையாட சென்றிருந்தது. இந்தத் தொடர் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத ஒரு முக்கியமான தொடர்.

அந்தத் தொடரில் விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒரு ஆட்டத்தோடு இந்தியா திரும்பிவிட்டார். அந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தனது மிகக்குறைந்த ரன்னை கொண்டுவந்து மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

அதற்கடுத்த இரண்டாவது போட்டியில் கேப்டனான ரகானே அற்புதமான ஒரு சதத்தை கொண்டுவந்து போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்தது. இந்தத் தொடரில்தான் இந்திய அணியில் முன்னணி வீரர்கள் வரிசையாக வெளியே கிளம்ப, இளம் வீரர்கள் வாசிங்டன் சுந்தர், நடராஜன், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் போன்றவர்கள் உள்ளே வந்து கிடைத்த வாய்ப்பில் அசத்தினார்கள்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முக்கிய விக்கெட் கீப்பராக விருதிமான் சஹா இருந்தார். அடுத்து அவர் சரியாக ரன் கொண்டு வர முடியாததால், அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு இருந்த ரிஷப் பண்ட் மூன்றாவது போட்டிக்கு வந்தார். அந்தப் போட்டியில் 97 ரன்கள் எடுத்தார். அடுத்து கபா டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்சில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்ததோடு அந்த தொடரையும் வெல்ல வைத்தார். இதற்குப் பிறகுதான் ரிஷப் பண்ட் இந்திய அணியில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் விக்கெட் கீப்பராக மாறினார்.

அந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தின்போது இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தவர் ஸ்ரீதர். அந்தத் தொடரில் ரிஷப் பண்ட் தனது விக்கெட் கீப்பிங்கை மேம்படுத்த எவ்வாறெல்லாம் உழைத்தார் என்பது பற்றி, அது குறித்து ஒரு புத்தகமே எழுதலாம் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுபற்றி அவர் கூறும்போது ” அவர் ஒரு விக்கெட் கீப்பராக முன்னேறி வருகிறார். விக்கெட் கீப்பிங் திறனை மேம்படுத்த அவர் உழைத்தது ஆச்சரியப்படும் ஒன்று. இதைப்பற்றி நான் ஒரு புத்தகமே எழுத முடியும். அவரது இந்தப் பயணத்தில் நான் இருந்ததற்கும், அவர் ஒரு அற்புதமான விக்கெட் கீப்பராக பரிணமிக்கும் போது அதை நான் கண்டதற்கும், மிகவும் அதிர்ஷ்டசாலி” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “அந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர் மிகக் கடினமாக உழைத்தார். அது என்னை மிகவும் கவர்வதாக இருந்தது. அவர் தனது விக்கெட் கீப்பிங்கை மேம்படுத்த தனது பேட்டிங் பயிற்சி நேரத்தை தியாகம் செய்தார். நவீன கிரிக்கெட்டில் இப்படி எந்த ஒரு வீரர் செய்தும் நான் பார்த்ததில்லை. விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை முழுவதுமாக முடித்துக் கொண்டே அவர் பேட்டிங் பயிற்சி பக்கம் சென்றார். விக்கெட் கீப்பிங்கில் அவரது கால் நகர்வு, கிளவ் வொர்க், எதிர்வினை திறன், கண் மற்றும் கை ஒருங்கிணைப்பு திறன், இதைப் பற்றி என்னால் ஒரு புத்தகமே எழுத முடியும். அந்த அளவிற்கு அவர் மிக கடினமாக உழைத்தார்” என்று மிக ஆச்சரியத்தோடு தெரிவித்திருக்கிறார்.