தற்போது இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணியின் வீரர் அதிரடியாக விளையாடி சதம் அடித்திருக்கிறார்.
தற்போது ஆஸ்திரேலிய அணி நான்கு நாட்கள் கொண்ட இரண்டு அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்திருக்கிறது. இந்தத் தொடரை இந்திய அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் விளையாடுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் 149 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார். லோயர் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் ஜோஸ் பிலிப்பி அதிரடியாக விளையாடிய ஆட்டம் இழக்காமல் 87 பந்துகளில் 127 ரன்கள் குவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 98 ஓவர்களில் அதிரடியாக 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் இளம் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ஹர்ஸ் துபே 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் 44, ஜெகதீசன் 64, சாய் சுதர்சன் 73, கேப்டன் ஸ்ரேயாஸ் 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இதற்கு அடுத்த ஜோடி சேர்ந்த படிக்கல் மற்றும் ஜுரல் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை மீட்டெடுத்தார்கள்.
இன்று மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 403 ரன்கள் எடுத்திருக்கிறது. படிக்கல் ஆட்டம் இழக்காமல் 178 பந்துகளில் 86 ரன்கள், ஜூரல் ஆட்டம் இழக்காமல் அதிரடியாக 132 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார்கள்.
இதையும் படிங்க : டி20 WC.. ஆல் டைம் இந்திய பிளேயிங் XI.. கம்பீரை சேர்க்காத தினேஷ் கார்த்திக்.. ஆச்சரிய அணி
தற்போது இந்திய அணியில் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்திற்கு கருண் நாயர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் ஜூரல் விக்கெட் கீப்பராக இல்லாமல் பேட்ஸ்மேன் ஆகவே ஆறாவது இடத்திற்கு விளையாட மிகவும் தகுதியாக இருக்கிறார். இதன் காரணமாக கம்பீர் அவரையே ஆறாவது இடத்தில் விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இதை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது!