இன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய டி20 அணியில் நமன் திர் விளையாடும் வாய்ப்பை பெற்றார். மேலும் வைபவ் சூரியவன்சுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் 37 பந்துகளில் 52 ரன்கள், ரூதர் போர்டு 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
இந்திய அணியின் தரப்பில் பந்துவீச்சில் நமன் திர் மூன்று விக்கெட் மற்றும் குல்தீப் யாதவ், அர்ஸ்தீப் சிங் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணி 171 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 10 பந்துகளில் 21 ரன்கள், சஞ்சு சாம்சன் 9 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இஷான் கிஷான் இறுதிவரை களத்தில் நின்று 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்.
இன்னொரு முனையில் அபாரமாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 42 பந்துகளில் சதம் அடித்து மொத்தமாக 43 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 102 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 14.4 ஓவரில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.