10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி! தீபக் சஹர், தவான், கில் அசத்தல்

0
173

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு துவக்கம் சிறப்பாக இல்லை.

- Advertisement -

காயம் காரணமாக வெளியில் இருந்த தீபக் சஹர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குள் வந்தார். துவக்கம் முதலே பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்திய இவர், ஜிம்பாப்வே அணியின் முதல் மூன்று வீரர்களையும் வீழ்த்தி இந்திய அணியை துவக்கம் முதலே டிரைவர் சீட்டில் அமரச் செய்தார். வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அபாரமாக விளையாடிய சிக்கந்தர் ராசா இம்முறை 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர்

அதிகபட்சமாக சக்கப்வா 35 ரன்களும், நரவா 34 ரன்கள், பிராட் எவான்ஸ் 33 ரன்களும் அடித்திருந்தனர். தீபக் சஹர் 29 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரசித் கிருஷ்ணா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் அடித்திருந்தது.

எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்க ஜோடியாக ஷிகர் தவான் மற்றும் கில் இருவரும் களமிறங்கினர். மிகவும் நிதானத்துடன் விளையாடி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இந்த ஜோடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்திருக்கிறது. ஷிகர் தவான் 81 ரன்களும், கில் 82 ரன்களும் அடித்திருந்தனர். இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அபாரமாக பந்துவீசி முதல் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய தீபக் சஹர் போட்டியின் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி பெறும் 13வது தொடர்ச்சியான வெற்றி இதுவாகும் ஒரு அணிக்கு எதிராக இந்திய அணி பெரும் அதிகபட்ச தொடர்ச்சியான வெற்றி இதுவே ஆகும். இதற்கு முன்னர் வங்கதேச அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இந்திய அணி 12 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சுப்மன் கில் மற்றும் ஷிகர் தவான் இருவரும் ஜோடி சேர்ந்து 192 ரன்கள் அடித்திருந்தனர். இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் போட்டியில் இந்த பார்ட்னர்ஷிப் இரண்டாவது அதிகபட்சமாக இருக்கிறது.