கேஎல் ராகுல், சூர்யகுமார் அரைசதம்; 186 ரன்கள் அடித்து வலுவான நிலையில் இந்தியா!

0
399

ஆஸ்திரேலியா அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 186 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டங்களை முடித்துவிட்டு, தற்போது மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடி வருகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல் 33 பந்துகளில் 57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இவர் 6 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் விலாசியது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து, மீண்டும் அதிர்ச்சி அளித்தார். விராட் கோலி 13 பந்துகளில் 19 ரன்கள் அடித்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தார்.

நல்ல பார்மில் இருக்கும் சூரியகுமார் யாதவ் இந்த வாய்ப்பையும் தவறவிடவில்லை. 33 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் ஒரு சிக்சர் உட்பட 50 ரன்கள் விலாசி ஆட்டமிழந்தார். வழக்கம்போல தனது அதிரடியான ஆட்டத்தை துவங்கிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 20 ரன்கள் அடித்து வெளியேறினார். ஹர்திக் பாண்டியா 5 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்தார்.

இரண்டு பந்துகள் மீதம் இருக்க, களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் பந்திலே சிக்சர் அடித்தார். இரண்டாவது பந்தையும் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஆட்டம் இழந்தார். இவர் இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் அடித்திருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது.

- Advertisement -

அபாரமாக பந்து வீசிய கேன் ரிச்சர்ட்சன் நான்கு ஓவர்களில் 30 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிளன் மேக்ஸ்வெல், ஆஸ்டன் அகர், மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.