1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் செய்ததை இப்பொழுது இந்தியா செய்ய வேண்டும் – அஜய் ஜடேஜா கூறிய கடந்த கால கிரிக்கெட் கதை!

0
2588
ICT

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்தியா அடைந்த அதிர்ச்சி தோல்வி இந்திய கிரிக்கெட்டில் பல மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. புதிய கேப்டன் ரோகித் சர்மா, புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் சேர்ந்து இந்திய அணிக்குள் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கும் அளவுக்கு சீர்திருத்தம் செய்ய வேண்டி இருந்தது.

பேட்டிங்கில் ஒரு அணியாக தைரியமாக ஆடும் முறையை அணிக்குள் கொண்டு வந்து, இன்டன்ட் பிரச்சனையை சரி செய்தார்கள். அதே சமயத்தில் புதிய பந்து வீச்சாளர்களுக்கும் அணிக்குள் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஒருபுறம் இந்தப் பிரச்சனைகள் சரியாக இன்னொருபுறம் இந்திய அணியில் இறுதிக்கட்ட பந்துவீச்சு மோசமாக ஆரம்பித்தது. இது இந்திய அணிக்கு இப்பொழுது வரை ஒரு தலைவலியாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

இப்படியான சமயத்தில் ஆட்டத்தின் எல்லா பாகங்களிலும் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடிய உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகுப்பகுதி காயத்தால் இந்திய உலகக்கோப்பை அணியில் இருந்து வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. அவரின் இடத்தை இன்னொருவரைக் கொண்டு ஈடு செய்வது என்பது இப்பொழுது முடியாத காரியம். அந்த அளவிற்கு அவர் தனித்துவமான வீரராக இந்திய அணிக்குள் இருக்கிறார்.

தற்பொழுது ஜஸ்பிரித் பும்ரா இல்லாத நிலையில், நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி எப்படி அணுகினால் சரியாக இருக்கும் என்று, இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக, இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கடந்த கால கிரிக்கெட் கதை ஒன்றை கூறியிருக்கிறார்.

இதுபற்றி அஜய் ஜடேஜா கூறும்பொழுது
” இந்திய அணியில் பும்ராவுக்கு என்று எந்த தனிப்பட்ட ரோலும் ஒதுக்கப்படவில்லை. அவர் இல்லாதது குறித்து பதில் சொல்வது கடினமான விஷயம்தான். இந்த பிரச்சனையை எளிதாக்க, அணியினர் மற்றும் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்க ஒன்றைச் சொல்ல முடியும். இந்த ஆண்டு முழுவதும் நாம் ஜஸ்பிரித் பும்ரா உடன் அதிகம் விளையாடவில்லை. அவரை வைத்து நாம் மிகக் குறைவான ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். ஆனாலும் நல்ல வெற்றிகளையும் பெற்றிருக்கிறோம். பும்ரா இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அவ்வளவுதான் ” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் “இந்திய அணியினருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு கதையை நான் கூற விரும்புகிறேன். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடந்த சமயத்தில், பாகிஸ்தான் அணியின் மிக முக்கியமான வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ். அவரும் பும்ரா போல் அந்த உலககோப்பையில் முதுகு பிரச்சனையால் விளையாடவில்லை. அவர் விளையாடாத அந்த உலகக் கோப்பையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வென்றது. இந்தக் கதையை இந்திய அணியினர் தங்களுக்கு உத்வேகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் ” என்று கூறியிருக்கிறார்!