இந்திய அணி விரும்பப்படுவது நல்ல ஆட்டத்தால் அல்ல; சம்பாதிக்கும் பணத்தால்தான் – பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் சர்ச்சை கருத்து!

0
190
Mohammed Hafeez

தற்போது நடந்து வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இரண்டாவது முறையாக ஒரே வார இடைவெளியில் மோதிக்கொள்ள இருக்கின்றன. மேலும் நடைபெற இருக்கும் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் சிறப்பான முறையில் செயல்படும் பொழுது இறுதிப்போட்டியில் மீண்டும் சந்தித்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்தியா பாகிஸ்தான் வழமையாக ஐசிசி தொடர்களில் ஒரு போட்டியில் மோதிக்கொள்ளும் போது அந்தப் போட்டியை சுற்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் வணிகமும் மிகப்பெரிய அளவில் உலகில் எந்த நாட்டு அணிகளுக்கும் இல்லாத அளவிற்கு இருக்கும். உலகின் எந்த மூலையில் இவர்கள் இருவரும் மோதினாலும் அந்த மைதானம் மனிதர்களால் நிறையும்.

- Advertisement -

தற்பொழுது ஒரே தொடரில் மூன்று முறை இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள வாய்ப்பிருப்பதால் இந்த ஆசிய கோப்பை தொடர் மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் உலகில் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. மேலும் ஆசிய கோப்பை குறித்தும் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் குறித்தும் வெளியில் மிகப்பெரிய விவாதங்கள் நடந்து வருகிறது.

ஆசிய கோப்பைக்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் முதுகெலும்பான நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி ஷா அப்ரிடி முழங்கால் காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். இவர் வெளியேறியது இந்திய அணியின் பேட்ஸ்மேன்களை நிம்மதி அடைய செய்யும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ச்சைக்குரிய முறையில் வக்கார் யூனுஸ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு இர்பான் பதான் திருப்பி பதிலடி தந்திருந்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற முகமது ஹபீஸ் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பற்றி கூறும்பொழுது ” ரோகித் சர்மாவின் உடல்மொழியில் நம்பிக்கையே இல்லை. அவர் குழப்பமாகவும் பயத்தோடும் இருக்கிறார். இதனால் அவர் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டனாக நீடிக்க மாட்டார். அவர் இதற்கு முன்பு தன்னம்பிக்கையோடு விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன் இப்போது அவர் அப்படி அல்ல. இதற்காக நான் வருந்துகிறேன்” என்று சர்ச்சைக்குரிய முறையில் பேசியிருந்தார்.

- Advertisement -

தற்போது முகமது ஹபீஸ் இந்திய அணி குறித்து மீண்டும் ஒரு சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருக்கிறார். உலகில் அதிக பணம் ஈட்டும் கிரிக்கெட் வாரியம் பற்றியான ஒரு பேச்சு போகும் பொழுது அவர் அதில் இந்திய அணி குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அவர் கூறும் பொழுது ” எனக்கு அதிகம் தெரியாது ஆனால் நம் சமூகத்தில் யார் அதிக பணம் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் அனைவராலும் விரும்பப்பட கூடியவர்களாக இருக்கிறார்கள். அனைவரிடமிருந்தும் அவர்கள் அதிக முத்தங்களை பெறக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை மட்டும் நான் நிச்சயமாக அறிவேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கிரிக்கெட்டில் இந்தியா ஒரு மிகப்பெரிய வருவாய் ஈட்டும் நாடு. எனவே உலகெங்கிலும் எங்கு விளையாடினாலும் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்கும் அவர்கள் நிறைய ஸ்பான்சர்ஷிப் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஜாக்பாட் கிடைக்கிறது இதை மறுப்பதற்கு இல்லை” என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் கூறியிருக்கும் இந்த கருத்து, இந்திய வீரர்கள் மிகத் திறமையான முறையில் விளையாடுவதால் உலகை கவரவில்லை, மாறாக அவர்கள் அதிக பணம் சம்பாதிப்பதால் அவர்களை மற்றவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியிருக்கிறார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தனக்கென ஒரு நிலையான இடத்தை வைத்திருக்கும் இந்திய அணியை வெறும் பணத்தால் முகமது ஹபீஸ் மதிப்பிட்டு பேசியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரிய ஒரு பேச்சு என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது!