“இந்தியா ரொம்ப ரொம்ப சாதாரண டீம்.. கிரிக்கெட் புக்குல இருக்குறத கூட செய்ய தெரியல” – வெளுத்து வாங்கும் இந்திய முன்னாள் வீரர்!

0
1142
ICT

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பைக்கு முன்பாக, இந்திய அணியின் முக்கிய வீரர்களான பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயம் அடைந்தார்கள். இது இந்திய அணியின் டி20 உலக கோப்பை திட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக இவர்களது இடத்திற்கு வீரர்களை கண்டறிவதற்காக, கடந்த ஆண்டு டி20 வடிவத்தில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை தொடரில், ஒரு வேகப்பந்துவீச்சாளரை குறைவாக எடுத்துக் கொண்டுபோய், பரிசோதனை முயற்சிகளை செய்து, இறுதி போட்டிக்கு தகுதி பெறமுடியாமல் இந்திய அணி வெளியேறியது. பிறகு டி20 உலக கோப்பையில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறி படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்த ஆண்டு அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. இந்தத் தொடருக்கு முன்பும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பல காயத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பும்ரா காயத்திலிருந்து மீண்டும் விட்டாலும் அவர் ஆட்டத்திற்கான முழு உடல் தகுதியை எட்டி விட்டாரா? என்று தெரியாது.

தற்பொழுது இந்தக் காரணத்தினால் இந்திய அணியில் மீண்டும் பரிசோதனை முயற்சிகள் உலகக் கோப்பையை மிக அருகில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பரிசோதனை களமாக இந்திய கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்துகிறது.

இதன் காரணமாக விளையாடும் பிளேயிங் லெவனில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். இதனால் ஜிதேஷ் சர்மாவுக்கு 15 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு தர முடியவில்லை. இசான் கிஷான் நல்ல முறையில் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக களம் இறக்கப்படுவதால், அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் பிளேயிங் லெவனில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. இப்படி தொடர்ச்சியாக பரிசோதனை முயற்சிகளாகவே போய் தோல்விகள் வந்து கொண்டே இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து மிகக் கடுமையாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும் பொழுது ” இதெல்லாம் மிக மிக சாதாரணமானது. இதை ஒதுக்கி தள்ளுவதில் கூட அர்த்தம் இல்லை. 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கியது. அதற்குப் பிறகு மொத்தம் ஏழு டி20 உலகக் கோப்பைகள் நடந்திருக்கிறது. அதில் ஒரே ஒரு முறை மட்டும் நாங்கள் இறுதிப் போட்டிக்கு சென்றோம். வெற்றிக்கான தீவிரமும் பசியும் இவர்களிடம் இல்லை. அதெல்லாம் இன்னும் நிறைய தேவை.

நேற்று சாகல் பதினாறாவது ஓவரில் மூன்று விக்கெட்டுகள் எடுத்த பிறகு, வெஸ்ட் இண்டிஸ் அணி மொத்தம் எட்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் அவரை மீண்டும் பந்து வீச வைக்கவில்லை. மேலும் வெஸ்ட் இண்டீஸின் கடைசிக்கட்ட பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் வேகம் பந்துவீச்சாளர்களை மிக எளிதாகச் சமாளித்து ரன் எடுத்தார்கள். இந்த மாதிரியான இடங்களில் புத்திசாலியாக இருக்க வேண்டும். கிரிக்கெட் புக்கில் இருப்பதை செய்தாலே போதும்!” என்று அதிரடியாக கூறியிருக்கிறார்!