33 வயசுல விராட் கோலி, 23 வயசுல அர்ஷ்தீப்.. பக்கா டீம் வச்சிருக்காங்க – இந்திய அணி பற்றி பேசிய ரிக்கி பாண்டிங்!

0
14114

இந்தியா தனது அணியில் இருக்கும் வீரர்களை மிகச்சரியாக பயன்படுத்தி வருகிறது, இதுதான் அவர்களுக்கு நன்றாக வேலை செய்கிறது என பாராட்டியுள்ளார் ரிக்கி பாண்டிங்.

நடைபெற்று வரும் எட்டாவது உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்று தனது குரூப்பில் 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டி மிக விறுவிறுப்பாகவும் கடைசி ஓவர் வரையும் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்திய அணியின் இத்தகைய வெற்றிக்கு இரண்டு வீரர்களை குறிப்பிட்டு கை காட்டலாம். அவற்றில் ஒருவராக இருப்பவர் மூன்று அரை சதங்களுடன் இருக்கும் முன்னாள் கேப்டன் விராத் கோலி. விராட் கோலி அதிக ரன் அடித்தவராக இருக்கிறார். மற்றொரு வீரர் வேகப்பந்து வீச்சில் அசத்தும் இளம் வீரர் அர்ஷதிப் சிங். இவர் தற்போது உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரில் ஒருவராக இருக்கிறார்.

மூத்த வீரர் மற்றும் இளம் வீரர் என இந்திய அணி ஒரு கலவையாக இருக்கிறது. இதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணம் என்று சமீபத்திய பேட்டியில் ரிக்கி பாண்டிங் பேசியுள்ளார்.

“இந்திய அணி தனது வீரர்களை மிக சரியாக பயன்படுத்தி வருகிறது. அவ்வபோது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை ஒவ்வொரு போட்டியிலும் தனது முழு திறமையை வெளிப்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தி வருகின்றனர். அணியில் அனுபவம் மிக்க வீரர்களும் இளம் வீரர்களும் கலவையாக இருக்கின்றனர்.

மிகக் குறைந்த வயதிலேயே இளம் வீரர்களை கண்டறிந்து அவர்களை உள்ளூர் போட்டிகளில் நிறைய ஆடவைத்து இந்திய அணிக்கு தயார் செய்கின்றனர். இதனால் தான் அவர்களது அணி வெற்றிகரமான அணியாக இருக்கிறது. தற்போது வரை முழு ஆட்டத்தை இன்னும் இந்திய அணி வெளிப்படுத்தவில்லை என நினைக்கிறேன். இனி வரும் போட்டிகளில் நிச்சயம் அது வெளிப்படும்.” என்றார்.

மேலும் பேசிய அவர் பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி விளையாடியதையும் குறிப்பிட்டார். “தனது அனுபவத்தை சரியான நேரத்தில் வெளிப்படுத்தி வருகிறார் விராட் கோலி. பாகிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி 8 பந்துகளில் நிச்சயம் இந்திய அணி வெற்றியை பெறச் செய்வார் என நினைத்தேன். அதற்கு ஏற்றார் போல விராட் கோலியும் அதை பெற்றுக் கொடுத்துவிட்டார். அவரது அனுபவத்தை இந்திய அணி முழுமையாக பயன்படுத்தி வருகிறது.” என்றார்.