டி20 உலககோப்பையில் இவர்தான் இனிமே ஓப்பனிங்? கேஎல் ராகுல் இல்லையா? – பயிர்ச்சி ஆட்டத்தில் தெரியவந்த தகவல்!

0
32851

இந்தியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணிக்கு துவக்க வீரராக பண்ட் களமிறங்குகிறார்.

2022 ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக கடந்த அக்டோபர் ஐந்தாம் தேதி மாலை மும்பையில் இருந்து ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றது இந்திய அணி.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி விளையாடுகிறது. இரண்டும் பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் புதிய முயற்சியாக ரிஷப் பண்ட் ரோகித் சர்மாவுடன் இணைந்து துவக்க வீரராக களம் இறங்குகிறார். கேஎல் ராகுல் மிடில் ஆடரில் விளையாட வைக்கப்பட உள்ளார்.

சமீபகாலமாக கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஜோடிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அதேநேரம் அதிரடியாக விளையாடக்கூடிய ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் சற்று சொதப்பலாக விளையாடுகிறார். இதன் காரணமாக அணியில் சில மாற்றங்களை கொண்டு வர ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் முடிவு செய்தனர்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது கே எல் ராகுல் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்தார். அச்சமயம் ரிஷப் பண்ட் துவக்க வீரராக களம் இறங்கினார். 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். அந்த அதிரடியை மீண்டும் தொடர்வதற்கு தற்போது நடக்கும் பயிற்சி ஆட்டத்திலும் இவருக்கு துவக்க வீரராக வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மெல்பர்ன் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டி20 உலக கோப்பையில் தொடர்ந்து ரிஷப் பண்ட்டை துவக்க வீரராக ஆட வைக்கலாமா? என்ற ஆலோசனைகள் நிலவி வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. ஏனெனில் ஆஸ்திரேலிய மைதானங்கள் பெரிதளவில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அச்சமயம் ரிஷப் பன்ட் போன்ற வீரர் துவங்கினால், சற்று அதிரடியாக பவர்-பிளே ஓவர்களில் ரன்களை குவிக்கலாம்.

ஹார்திக் பாண்டியா தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் கீழ் வரிசையில் இருக்கின்றனர். அவர்களும் பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர் என்பதால், இந்திய அணியால் தொடர்ச்சியாக அதிக ரன்கள் குவித்து எதிரணிக்கு திணறலை ஏற்படுத்த முடியும், என்று அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கலாம்.