20.1 ஓவரில் நியூசிலாந்தை நொறுக்கி இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது!

0
917
IndvsNz

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது!

இந்த நிலையில் இன்று தொடரின் இரண்டாவது போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ரோகித் சர்மாவின் முடிவுக்கு நியாயம் செய்த இந்திய பந்துவீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் பேட்டிங் வரிசையை சிதறடித்தார்கள். அந்த அணியின் கிளன் ஃபிலிப்ஸ் அடித்த 36 ரன்கள் தான் அதிகபட்ச ரன் ஆகும். முடிவில் நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.

இந்தியா அணி தரப்பில் பந்துவீச்சில் முகமது சமி ஆறு ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் செய்து 18 ரன்கள் விட்டுத் தந்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். முகமது சிராஜ், சர்துல் தாக்கூர் மற்றும் குல்தீப் யாதவ் மூவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

சிறிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான துவக்கம் தந்தார். அவர் 50 பந்துகளில் 51 ரன்களை ஏழு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து வந்த விராட் கோலியும் 11 ரன்களில் ஆட்டம் இழக்க, கில் மற்றும் இசான் இருவரும் ஆட்டத்தை முடித்து வைத்தார்கள். 20.1 ஓவர்களில் இழப்பை ஏற்றி இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. கில் ஆட்டமிழக்காமல் நாற்பது ரன்கள் எடுத்து களத்தில் இறுதிவரை இருந்தார்.