இந்தியா, தென்ஆப்பிரிக்கை இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தியா 288 ரன்கள் பின்தங்கியது. இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் 4வது இடத்தில் களமிறங்கினர்.
ஆனால் வெறும் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், மார்கோ ஜான்சனின் ஷார்ட் பந்தை புல் செய்ய முயன்று தவறாக அடித்து டக் அவுட்டானார். இது தொடரில் அவரது மூன்றாவது தொடர்ச்சியான குறைந்த ஸ்கோர் ஆகும். இதுகுறித்து பேசிய முன்னாள் இந்திய தேர்வாளரும், விக்கெட் கீப்பருமான சபா கரீம் கடும் ஏமாற்றம் தெரிவித்தார்.
“துருவ் ஜூரல் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்த வீரர். அதனால்தான் இந்த அணுகுமுறை என்னை ஆச்சரியப்படுத்தியது. 4 இடத்தில் சிறப்பு பேட்ஸ்மேனாக களமிறங்குவது அபாரமான வாய்ப்பு. இந்த இடத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். இது ஏற்ற சூழலும், மைதானமும் பெரிய ஸ்கோர் அடித்து நம்பிக்கை பெறவும், டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் பிடிக்கவும் ஏற்ற தருணம்.”
“உள்நாட்டு கிரிக்கெட்டில் இதுபோன்ற சூழல்களில் பலமுறை ஆடியவர் ஜூரல். அதனால் அதிகம் எதிர்பார்த்தேன் ” என்று சபா கரீம் கூறினார். ஷுப்மன் கில் காயம் காரணமாக விலகியதால், 3வது இடத்தில் சாய் சுதர்ஷன் களமிறங்கினார். ஆனால் அவரும் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சைமன் ஹார்மரின் பந்தை புல் செய்ய முயன்று மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.
இதுகுறித்து பேசிய சபா கரீம், “சாய் சுதர்ஷன் நல்ல தொடக்கம் பெறுகிறார். ஆனால் பேக் புட் ஆட்டத்தில், குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக தன்னை மிகவும் சங்கடமான நிலைக்கு தள்ளிக்கொள்கிறார். தோள்களை சுதந்திரமாக அசைக்க முடியாமல் கட்டுப்படுத்தப்படுகிறார்.
இதையும் படிங்க: 201 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்தியா.. பாலோ ஆன் தராத தென்னாப்பிரிக்கா.. காரணம் என்ன தெரியுமா?
இன்று மிட்விக்கெட் திசையில் ஆட முயன்றபோது அத்தகைய சங்கட நிலைக்கு சென்று விக்கெட்டை பறிகொடுத்தார்,” என்று தெரிவித்தார். மூன்றாம் நாள் முடிவில் தென்ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் 314 ரன்கள் என்ற ஸ்கோரை தென்ஆப்பிரிக்கா இப்போட்டியில் முழு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. .