இந்தியா Vs நியூசிலாந்து முதல் ஒரு நாள் போட்டி எப்போது? யாருக்கு வாய்ப்பு

0
7687

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி ஆக்லாந்து நகரில் வரும் வெள்ளிக்கிழமை காலை இந்திய நேரப்படி ஏழு மணிக்கு தொடங்குகிறது.

இந்த போட்டியில் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார். டி20 போட்டியில் இடம் பெறாத இந்திய வீரர்கள் நியூசிலாந்து வந்தடைந்தனர். டி20 போட்டியில் சஞ்சு சாம்சன், சுப்மான் கில் ,உம்ரான் மாலிக்,குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஒரு நாள் ஆட்டத்தில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க வீரராக ஷிகர் தவானுடன் சுப்மான் கில் விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.

நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும். டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்திய தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் நடு வரிசையில் விளையாட தங்களது இடத்தை ஏற்கனவே உறுதி செய்து விட்டதாக கிரிக்கெட் விமர்சனம் கூறுகின்றனர். இதனால் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்கிறது .

கடைசியாக தென் ஆப்பிரிக்கா தொடரில் சஞ்சு சாம்சன் சிறப்பாக செயல்பட்டு அசத்தினார். எனினும் டி20 கிரிக்கெட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக களம் கண்ட ஸ்ரேயாஸ், டி20 தொடரில் கடைசி ஆட்டத்தில் கோல்டன் டக் ஆனார். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளராக தீபக்சாகர், ஆர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷர்துல் தக்கூர் ஆகிய நான்கு வீரர்களின் மூன்று பேர் இடம் பெறுவார்கள். இது போன்று ஒரே ஒரு சுழற் பந்துவீச்சாளராக சாஹலுக்கு தான் இடம் கிடைக்கும் என கருதப்படுகிறது. இந்தப் போட்டியும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பு ஆகிறது.