பக்கா பிளானோட வரோம்; டெஸ்டுல அடிச்சீட்டிங்க, ஓடிஐ எங்களை எப்படி சமாளிக்கிறீங்கன்னு பாக்றோம் – ஆஸ்திரேலியா கோச் பேட்டி!

0
142

ஒருநாள் போட்டிக்கு பேட்டிங் பௌலிங் இரண்டிலும் பலம் பொருந்திய அணியாக வருகிறோம், நிச்சயம் தொடரை கைப்பற்றுவோம் என்று உறுதிப்பட பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்கள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறையாக பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

அதன்பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற மார்ச் 17ஆம் தேதி துவங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 17ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி துவங்குகிறது. இதற்காக இரு அணிகளும் அங்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெஸ்ட் தொடரை இழந்த விரக்தியில் இருக்கும் ஆஸ்திரேலியா அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுவதற்கு முழு முனைப்புடன் திட்டமிட்டு வருவதாக அணி நிர்வாகத்தின் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வந்தன. ஏனெனில் இந்த ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை நடக்கிறது. அதிலும் ஆஸ்திரேலியா அணி கவனம் செலுத்தி வருவதால் திட்டத்தை தீவிரமாக தீட்டி வருவதாக தெரிகிறது.

ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஒருநாள் தொடர் குறித்தும், அதற்கான பிளேயிங் லெவன் எப்படி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது:

- Advertisement -

“டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு அணி நிர்வாகம் மற்றும் வீரர்களிடம் தீவிரமான ஆலோசனை நடத்தப்பட்டது. அணியின் பேட்டிங்கை ஆழமாக எடுத்துச் செல்லலாம். அத்துடன் பேலன்ஸ் ஆன அணியாக இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டோம். இதன் அடிப்படையில் எட்டு வீரர்கள் வரை பேட்டிங் செய்யும் அளவிற்கு அணியை தயார் செய்திருக்கிறோம். பவுலிங் பாலன்ஸ் வேண்டும் என்பதற்காக ஆல்ரவுண்டர்கள் அதிகமாக அணியில் இருக்கின்றனர்.

உலககோப்பைக்கு முன்பாக சில முயற்சிகள் செய்து பார்க்க இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்தது வருத்தமளிக்கிறது. ஆனால், அதை நினைத்து வருத்தப்பட நேரமில்லை, அடுத்தடுத்த தொடர்களில் கவனம் செலுத்துகிறோம். தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு அணியை எடுத்துச்செல்கிறோம்.

பேட் கம்மின்ஸ் இல்லாதது ஏமாற்றம் தான். அவரது சூழலை புரிந்துகொள்கிறோம். ஸ்மித் மிகச்சிறந்த கேப்டன். டெஸ்டில் தனது அனுபவத்தை கட்டினார். ஒருநாள் தொடரிலும் அவருடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பு. ஒருநாள் தொடர்களில் இந்தியாவை எதிக்கொள்வது கடினம் என்றாலும், பதிலடி கொடுப்போம். ஒருநாள் தொடரை வெற்றி பெறவும் முனைவோம்.” என்றார்.