237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா ; உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முன்னேற்றம்

0
1002
India Champions in Srilanka Test Series

இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சற்று முன்னர் நடைபெற்று முடிந்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 92 ரன்கள் குவித்தார்.பின்னர் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே குவித்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

143 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.2வது இன்னிங்சிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 67 ரன்கள் குவித்து அசத்தினார்.

237 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி

447 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி 2வது இன்னிங்சை நேற்று தொடங்கியது. 2வது இன்னிங்சில் அந்த அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே மற்றும் குசால் மென்டிஸ் இவர்கள் இருவர் மட்டுமே சிறப்பாக விளையாடினர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இருந்த காரணத்தினால் அந்த அணி 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மிகப்பெரிய தோல்வியை எட்டி இருக்கிறது.

இலங்கை அணிக்கு 2வது இன்னிங்சில் கேப்டன் திமுத் கருணாரத்னே அதிகபட்சமாக 107 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் பும்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 2வது டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுக்கப்பட்டது.

டெஸ்ட் தொடரின் முடிவில் இந்திய அணி இலங்கை அணியை 2-0 என்கிற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. தொடர் நாயகன் விருது ரிஷப் பண்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது

அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் கேப்டன் ரோஹித் ஷர்மா

ரோஹித் ஷர்மா முழுநேர கேப்டன் ஆன பின்னர் தொடர்ச்சியாக 14வது வெற்றியை இன்று ருசி பார்த்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் (3-0) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் (3-0) மற்றும் டி20 தொடர் (3-0) இலங்கை அணிக்கு எதிராக டி20(3-0) மற்றும் டெஸ்ட் தொடர் (2-0) என அனைத்து தொடரையும் தோல்வியின்றி கைப்பற்றியிருக்கிறார்.

மறுபக்கம் இந்திய அணி 2021-2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆறு வெற்றிகள், மூன்று தோல்விகள், இரண்டு போட்டியில் சமன் என 58.33 சதவீத புள்ளிகளை பெற்று இந்திய அணி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலிடத்தில் ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான் மற்றும் மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.