ஆப்ரோ ஆசிய கோப்பைக்காக ஒரே அணியாக இணையும் இந்தியா – பாகிஸ்தான் ; அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியீடு

0
575
India and Pakistan Team

கிரிக்கெட் உலகில் இரண்டு அணிகள் உலகின் எந்த நாட்டு மைதானத்தில் மோதினாலும், மைதானம் இரசிகர்களால் நிரம்பி வழியும், பணம் கொட்டும் என்றால், அது இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்குத்தான்.

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக இந்த இரு நாட்டு அணிகளும் இருநாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடாமல் இருந்து வருகின்றன. ஐ.சி.சி நடத்தும் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன.

தற்போது இரு நாட்டு கிரிக்கெட் இரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதாவது அது இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளும், இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் அல்ல. இரு நாட்டு கிரிக்கெட் வீரர்களும் ஒரே அணியில் சேர்ந்து விளையாடும் தகவல் அது.

என்னவென்றால் ஆசிய ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு மத்தியில் நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆசிய லெவன் சார்பாக இந்திய பாகிஸ்தான் வீரர்கள் சேர்ந்து ஒரே அணியில் விளையாடும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

ஆசிய ஆப்பிரிக்க கிரிக்கெட் தொடர் முதன் முதலாக 2005 ஆம் ஆண்டு, இரு கண்டத்தின் கிரிக்கெட் அமைப்புகளின் வருமானத்திற்காக நடத்தப்பட்டது. இந்த தொடர்களை ஐ.சி.சி அங்கீகரித்தது. இதில் அடிக்கப்படும் ரன்கள், விக்கெட்டுகள் எல்லாமே ஒரு வீரரின் ஒட்டுமொத்த ரன்கள், விக்கெட்டுகள் எண்ணிக்கையில் சேர்க்கப்படும். 2005ஆம் ஆண்டு நடந்த தொடர் 1-1 என மழையால் டிராவில் முடிந்தது. அடுத்து 2007ல் நடத்தப்பட்ட இரண்டாவது ஆசிய ஆப்பிரிக்க தொடர் மூன்று ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டி என இரண்டு தொடர்களாக நடத்தப்பட்டது.

இந்தத் தொடரில் இந்திய அணி சார்பில் சேவாக், கங்குலி, தோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான் போன்ற முன்னணி வீரர்கள் பங்குபெற்றனர். இந்தத் தொடரில் ஆப்பிரிக்க லெவன் அணியை இரு தொடர்களிலும் வொய்ட்வாஷ் செய்தது ஆசிய லெவன் அணி. ஆசிய ஒருநாள் போட்டி அணிக்கு மஹேல ஜெயவர்த்தனாவும், ஆப்பிரிக்க லெவன் அணிக்கு ஜஸ்டின் கெம்பும் தலைமை ஏற்றனர். டி 20 போட்டிக்கு ஆசிய லெவன் அணிக்கு சோயப் மாலிக்கும், ஆப்பிரிக்க லெவன் அணிக்கு தன்மய் மிஷ்ராவும் தலைமை ஏற்றனர். இதில் ஒருநாள் தொடரில் மகேந்திர சிங் தோனி ஒரு சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!