டி20 உலகக்கோப்பையில் இரண்டாவது சதம்; நியூசிலாந்து அசத்தல் பேட்டிங்!

0
3401
Nz vs Sl

எட்டாவது டி20 உலக கோப்பையில் இன்று குரூப் 1ல் சிட்னி மைதானத்தில் நியூசிலாந்து இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வென்றால் அரை இறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகப் பிரகாசம் அடையும். அதே வேளையில் இலங்கை அணி வென்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு செல்லும். இப்படியான நிலையில் இந்த போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது!

இந்த போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்த டி20 உலக கோப்பையின் முதல் போட்டியான ஆஸ்திரேலிய உடன் நடந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து துவக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் மற்றும் கான்வே இருவரும் இந்த ஆட்டத்தில் ஏமாற்றினார்கள். அதற்கு அடுத்து வந்த கேப்டன் கேன் வில்லியம்சனும் வெளியேறினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து கிளன் பிலிப்ஸ் மற்றும் டேரில் மிச்சல் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் பொறுமை சரிவராது என்று கிளன் பிலிப்ஸ் அதிரடிக்கு மாற அவருக்கு மிச்சல் ஒத்துழைப்பு தர ஆரம்பித்தார்.

மிகச் சிறப்பாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் அரை சதம் அடித்தார். இதற்குப் பிறகு அவரது ஆட்டத்தில் வேகம் அதிகரித்தது. இந்த நிலையில் உடன் விளையாடி வந்த டேரில் மிச்சல் 24 பந்தில் 22 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

ஆனாலும் அதிரடியை குறைக்காத பிலிப்ஸ் 61 பந்துகளில் தனது இரண்டாவது சர்வதேச டி20 சதத்தை அடித்தார். இந்த டி20 உலகக் கோப்பையில் இது இரண்டாவது சதமாகும். இதற்கு முன்பு இதே மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்காவில் ரூசோவ் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் 64 பந்துகளில் பத்து பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸருடன் பிலிப்ஸ் 104 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 167 ரன்கள் எடுத்துள்ளது. இலங்கைத் தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ரஜிதா நான்கு ஓவர்கள் பந்து வீசி 23 ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹசரங்கா நான்கு ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.