ரஞ்சியில் ஹைதராபாத்தை வைத்து பாஸ்பால் விளையாடிய மும்பை ; அதிரடி ரன் குவிப்பு!

0
334
Ranji

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியின் 88 ஆவது தொடர் டிசம்பர் 13 ஆம் தேதி ஆரம்பித்து அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி முடிவடைகிறது!

இதில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள மும்பை அணியும் ஐதராபாத் அணியும் இன்று மும்பையில் உள்ள ஒரு மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பதிவு செய்தது. மும்பை அணிக்கு தொடக்கம் தர பிருத்வி ஷா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினார்கள். இதில் பிரித்வி ஷா 19 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்!

இதற்கு அடுத்து இந்திய அணியின் அதிரடி வீரர் சூரியகுமார் யாதவ் மூன்றாவது வீரராக களம் இறங்க ஆட்டத்தில் சூடு பிடித்தது. 80 பந்துகள் களத்தில் நின்ற சூரியகுமார் 90 ரன்கள் குவித்து வெளியேறினார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடக்கம்!

இதற்கு அடுத்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடி வந்த ரகானே களம் இறங்கினார். ஜெய்ஸ்வால் மற்றும் ரகானே இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பான முறையில் மும்பை அணிக்கு ரன்கள் சேர்த்ததோடு சதத்தையும் கண்டார்கள்!

ஜெய்ஸ்வால் 195 பந்துகளில் 162 ரன்களை 27 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் எடுத்து ஆட்டம் இழந்தார். ரகானே 190 பந்துகளில் 139 ரன்களை 18 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர் உடன் எடுத்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார். இவருடன் ஜோடி சேர்ந்த சர்ப்ராஸ்கான் 40 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் மும்பை அணி 457 ரன்களை குவித்துள்ளது. ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் என்ற விதத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் ஒரு நாள் போட்டி போல ஹைதராபாத் அணியைப் புரட்டி எடுத்துள்ளார்கள். நாளை மும்பை அணியின் ஸ்கோர் இன்னும் உயரவே அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதால், இந்தப் போட்டியில் மும்பை அணியின் கைகளே ஓங்கி இருக்கிறது!