சென்னையோட பியூட்டியே இதுதான்.. இங்க வெறும் பேட்டிங் மட்டுமே வச்சு ஒன்னும் பண்ண முடியாது – ரோகித் சர்மா பேட்டி!

0
1830

சென்னை பிட்ச்சில் ஒரு இடத்தில் மட்டும் நன்றாக செயல்பட்டால் போதாது. பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் அனைத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த பிட்ச்சின் சிறப்பு இதுதான் என்று தனது பேட்டியில் கூறியுள்ளார் ரோகித் சர்மா.

பிளே-ஆப் சுற்றில் முதல் குவாலிபயர் போட்டி நடைபெற்று முடிந்துவிட்டது. இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்தது.

- Advertisement -

இந்த இலக்கை சேஸ் செய்த லக்னய் அணி ஒரு கட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்தது. ஆகாஷ் மத்வால் போட்டியின் 11ஆவது ஓவரை வீசினார். அப்போது ஆயுஸ் பதோணி மற்றும் நிக்கோலஸ் பூரன் இருவரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதன் பிறகு வேடிக்கையான தவறுகளை செய்து ஸ்டாய்னிஸ்(40), தீபக் ஹூடா(15), கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் ரன்அவுட் ஆகினர்.

கடைசியில் 101 ரன்களுக்கு லக்னோ அணி ஆல் அவுட் ஆனது. 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபாரமாக பந்து வீசிய ஆகாஷ் மத்வால் ஐந்து ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த ரோகித் சர்மா கூறுகையில், “(சரிவில் இருந்து மீண்டு இப்போது இவ்வளவு தூரம் வந்திருப்பது குறித்து) இதைத்தான் பல வருடங்களாக செய்து வருகிறோம். நாங்கள் செய்து முடித்ததை யாரும் எங்களிடம் இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனாலும் எங்களிடம் இருக்கும் அணியை வைத்து செய்து காட்டியுள்ளோம்.

- Advertisement -

ஆகாஷ் மத்வால் கடந்த சீசனில் எங்களுக்கு சப்போர்ட் பவுலராக இருந்தார். பும்ரா, ஆர்ச்சர் இல்லாதபோது இவரிடம் அந்த திறமை இருக்கிறது என்று பார்த்து அணியில் எடுத்தோம். கடந்த சீசன் விளையாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த சீசனில் சரியாக வருவார் என்று பட்டது. விளையாட வைத்தோம்.

பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியை பார்க்கையில், இளம் வீரர்கள் உள்ளே வந்து இந்திய அணிக்கு விளையாடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள். அணியில் உள்ளே வரும் இளம் வீரர்கள் தங்களை சிறப்பாக உணரும் அளவிற்கு இங்கு சூழ்நிலைகள் அமைக்கப்படுகிறது. அணியில் இருக்கும் மூத்த வீரர்கள் அதிகாரிகள் என பலரும் கேட்கும் நேரத்தில் ஆலோசனை கொடுக்க தயாராக இருக்கின்றனர். இளம் வீரர்களுக்கு அவர்களது ரோல் என்னவென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை அவர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இன்றைய போட்டியில் ஃபீல்டிங்கில் பலரும் ஒத்துழைப்பு கொடுத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. சென்னை பிட்ச்சின் சிறப்பு இதுதான். வெறுமனே பேட்டிங் அல்லது பவுலிங் ஏதாவது ஒன்றில் செயல்பட்டால் சரி வராது. ஒட்டுமொத்தமாக பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என அனைத்திலும் நன்றாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் வான்கடே மைதானத்தில் பேட்டிங்கில் ஒருவர் அல்லது இருவர் சிறந்த பங்களிப்பை கொடுத்தாலே போதும். இதுதான் சென்னை பிட்சில் இருக்கும் சிறப்பு.” என்றார்.