சச்சினின் 100 செஞ்சுரிகள் சாதனையை விராட் கோலி முறியடிக்க, என்ன செய்யவேண்டும்? – கவாஸ்கர் அறிவுரை!

0
1264

சச்சினின் 100 சதங்கள் சாதனையை விராட் கோலி முறியடிக்க இதைமட்டும் செய்தால் போதும் என அறிவுரை கூறியுள்ளார் கவாஸ்கர்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் சதம் அடிக்க முடியாமல் தவித்து வந்த விராட் கோலி ஆப்கனிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்து முடிவுக்கு கொண்டு வந்தார்.

வங்கதேச தொடரின் போது, ஒருநாள் போட்டியில் சதம் அடித்து தனது 44 வது சதத்தை பூர்த்தி செய்தார். அதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் சதம் அடித்தார். இந்திய மண்ணில் மூன்று வருடங்கள் கழித்து விராட் கோலி அடிக்கும் சதம் இதுவாகும்.

இதுவரை 46 சதங்களை ஒருநாள் போட்டிகளில் பூர்த்தி செய்துள்ளார். இன்னும் மூன்று சதங்கள் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்கள் என்ற சாதனையை சமன் செய்யலாம். அதேநேரம் ஒட்டுமொத்தமாக சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பதற்கு விராட் கோலிக்கு இன்னும் 26 சதங்கள் தேவைப்படுகிறது.

தற்போது 34 வயதாகும் விராட் கோலி சச்சினின் இந்த சாதனையை குறைந்தபட்சம் சமன் செய்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றதா? அல்லது முறியடிக்கவும் செய்வாரா? என்கிற விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதில் கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது:

“விராட் கோலி நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். இந்த வயதிலும் ஒரு ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் எளிதாக இரண்டு ரன்களை எடுக்க முடிகிறது. விரைவாக பவுண்டரி சிக்ஸர்கள் அடிக்கிறார். இந்திய அணியில் இருக்கும் மிகவும் ஃபிட்டான வீரராக இருக்கிறார்.

20-22 வயது வீரர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலி, இன்னும் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் விளையாடினால் ஒரு ஆண்டுக்கு 6 சதங்கள் வீதம் அடிக்க நேரிடும் பட்சத்தில் எளிதாக சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை சமன் செய்யவும் அல்லது முறியடிக்கவும் முடியும்.

சச்சின் டெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். அதேபோல் நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலி நிச்சயம் 40 வயது வரை விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகளும் உடல் தகுதியும் இருக்கின்றன. எனவே என்னை பொறுத்தவரை, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி சமன் செய்ய முடியும் என்று நினைக்கிறேன்.” என்றார்.