2023ல் சூப்பர் கிங்ஸ் அணிக்காக நான் விடையாட மாட்டேன் – மொயின் அலி!

0
5463

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2023ல் என்னால் விளையாட முடியாது என்று மொயின் அலி தெரிவித்திருக்கிறார்.

சவுத் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. முதல் சீசனில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இந்த ஆறு அணியையும் ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை, லக்னோ, ராஜஸ்தான், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் அணிகளை வாங்கியுள்ளனர். ஒவ்வொரு அணியும் இரண்டு முதல் ஐந்து வீரர்கள் வரை ஏலத்திற்கு முன்பாக எடுத்திருக்கின்றன. மீதமுள்ள வீரர்கள் ஏலத்தின் போது எடுக்கப்படுவர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் வாங்கியுள்ள அணிக்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்று பெயரிட்டுள்ளது. ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனா, ஜெரால்ட் கோட்ஸி, ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகிய ஐந்து வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடருக்கு ஆணையராக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். பல முன்னெடுப்புகளை தொடர்ந்து எடுத்து வரும் இவர் இன்னும் சில அணிகள் இந்த தொடரில் இடம் பெறுவதற்கு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும் விரைவில் இந்த தொடரை நடத்துவதற்கும் அட்டவணைகளை தயார் செய்து வருகிறார். முதல் கட்டமாக, வருகிற 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் முதல் சீசன் துவங்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கான போட்டி அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக டு பிளேசிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆல்பி மார்கல் உட்பட்டோர் துணைப் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.

வருகிற ஜனவரி மாதம் துவங்கும் இந்த தொடரில் மொயின் அலி பங்கேற்க இயலாது என்று அவரே கூறியிருக்கிறார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் 2023 ஆம் ஆண்டு சீசனில் பங்கேற்க இயலாது என்று ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், “ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு வணக்கம். நான் மிகவும் முக்கியமான செய்தி ஒன்றை எடுத்து வந்திருக்கிறேன். தனிப்பட்ட சில காரணங்களுக்காக என்னால் 2023 ஆம் ஆண்டுக்கான சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடரில் விளையாட இயலவில்லை. இதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள சூப்பர் கிங்ஸ் மற்றும் இந்தியாவில் உள்ள சூப்பர் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்காகவும் விளையாடுவேன். இந்த ஆண்டு விளையாட முடியாமல் போனதற்கு நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.” என்றார். அதேநேரம் 2023ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மொயின் அலி விளையாடுவார் என்றும் அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுத் ஆப்பிரிக்கா டி20 தொடரில் ஒவ்வொரு அணியும் வாங்கியுள்ள வீரர்கள் பட்டியல்

மும்பை கேப் டவுன் – காகிசோ ரபாடா, ரஷித் கான், லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், டெவால்ட் ப்ரீவிஸ் 

பார்ல் ராயல்ஸ் – ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், ஓபேட் மெக்காய், கார்பின் போஷ்

RPSG டர்பன் – ஜேசன் ஹோல்டர், குயின்டன் டி காக், ரீஸ் டாப்லி, கைல் மேயர்ஸ், ப்ரீனெலன் சுப்ராயன்

பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் – அன்ரிச் நார்ட்ஜே, மிகேல் பிரிட்டோரியஸ்

ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் – ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, மகேஷ் தீக்ஷனா, ஜெரால்ட் கோட்ஸி, ரொமாரியோ ஷெப்பர்ட்

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – ஐடன் மார்க்ரம், ஒட்னீல் பார்ட்மேன்