” நான் தினேஷ் கார்த்திக்கை அவமரியாதை செய்யவில்லை ஆனால்… ” மேத்யூ ஹைடன்!

0
5600
Matthew Hayden

இந்திய அணியில் தற்போது ரவீந்திர ஜடேஜா காயத்தால் இல்லாமல் போனது பேட்டிங் வரிசையிலும், ஆடும் அணிக்காக 11 வீரர்களை தேர்ந்தெடுப்பதிலும், மிகப்பெரிய குழப்பத்தை கேப்டனுக்கும் பயிற்சியாளருக்கும் கொடுத்திருக்கிறது.

ஜடேஜா அணியில் இருந்த பொழுது அவரை ஒரு இடதுகை பேட்ஸ்மேன் ஆக இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பயன்படுத்திக்கொண்டது. இவர் ஒரு நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேனாக இருந்ததால், இவர் ஒரு இடதுகை பேட்ஸ்மேன் தேவையையும் தீர்த்து வைத்தார், அதே சமயத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு முன்வந்து, அவரை கடைசி 3 அல்லது 4 ஓவர்கள் விளையாடுமாறு செய்ய வைக்க முடிந்தது.

- Advertisement -

தற்பொழுது இவர் அணியில் இல்லாத பொழுது அக்சர் படேல் அந்த இடத்திற்கு வருகிறார். இவர் ரவீந்திர ஜடேஜா அளவுக்கு பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக் கூடிய வீரரா என்றால் கிடையாது. இதனால் இவரை முன்கூட்டியே திணேஷ் கார்த்திக்குக்கு முன் அனுப்பும் பொழுது அது ஒரு பெரிய விவாதமாக மாறுகிறது. மேலும் ஜடேஜா இல்லாத காரணத்தால் ரிஷப் பண்ட் அணிக்குள் இருக்கவேண்டும் என்கிற புது தேவையும் உருவாகிறது.

இப்படி ஒரே ஒரு வீரர் அணியில் இல்லாமல் போகும் பொழுது மொத்த அணியின் திட்டமும் பாதிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் சேர்ந்து உருவாக்கி வந்த திட்டங்களில் தற்போது மிகப் பெரிய மாறுதலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியுடனான கடந்த டி20 போட்டியில் அக்சர் படேல் தினேஷ் கார்த்திக்குக்கு முன் அனுப்பிவைத்தார்கள். இது பல முன்னாள் வீரர்கள் இடையே விவாதத்தை உருவாக்கியுள்ளது. அக்சர் படேல் களம் இறங்கும் பொழுது கிரிக்கெட் வர்ணனையில் இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் மற்றும் அஜித் அகர்கர் இருவருக்கும் இது குறித்த பேச்சு உருவானது.

- Advertisement -

இதுகுறித்து முதலில் மேத்யூ ஹைடன் கூறும் பொழுது ” நான் தினேஷ் கார்த்திக் செய்துகொண்டிருக்கும் ரோல் பற்றி யோசித்துப் பார்க்கிறேன். இந்த ரோல் அவருக்கு எப்படி கடைசிவரை சரிவரும். அவர் முன்கூட்டியே வந்து விளையாட வேண்டும். நான் அவரை அவமரியாதை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதை நான் கூறவில்லை” என்று பேசினார். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே அக்சர் படேல் ஒரு பவுண்டரி அடித்தார், ஆனால் அப்பொழுதும் பேசிய மேத்யூ ஹைடன் “தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர். இதே ஷாட்டை அவர் உள்ளே வந்தும் ஆட முடியும். நான் அவர் ஃபினிஷிங் ரோலில் வருவதை கேள்விக்கு உள்ளாக்குகிறேன்” என்று கூறினார்.

மேத்யூ ஹைடனின் இந்தக் கருத்தை ஆதரித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகர்கர் “தினேஷ் கார்த்திக்கை பொறுத்தவரை எனக்கு இது விசித்திரமாக இருக்கிறது. அவர் இப்போது உள்ளே வர போதுமான பேட்டிங் திறமைகளைக் கொண்டிருக்கக்கூடிய வீரர். அவர் 16வது அவருக்குப்பின் வர வேண்டிய அவசியம் இல்லை. அவர் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விளையாடுகிறார் என்று ஞாபகத்தில் இருக்க வேண்டும். தென்னாபிரிக்கா தொடரிலும் இதேதான் நடந்தது தற்போதும் இதுதான் நடக்கிறது. கார்த்திக் முன்பு வந்து விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.