வாட்ஸ்அப் டிபியில் காலா ரஜினிகாந்த் புகைப்படம் – அதை வைப்பதற்கு பின்னால் இருக்கும் காரணத்தை வெளியிட்ட வெங்கடேஷ் ஐயர்

0
173
Venkatesh Iyer Sets Kaala Rajini as his Whatsapp dp

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பின்னர் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை வெங்கடேஷ் ஐயர் பெற்றார். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் முறையாக வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்காக விளையாடினார்.

தற்பொழுது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் களமிறங்க கலக்க தயாராக இருக்கிறார். தன்னுடைய அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக குறுகிய நாட்களில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அவர் தன்னுடைய வாட்ஸ்அப் டிபியில் ரஜினிகாந்த் புகைப்படத்தை வைத்துள்ளார்.

நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகன்

அவருடைய வாட்ஸ்அப் டிபியில் ரஜினிகாந்த் புகைப்படம் ( காலா படத்தில் உள்ள ஒரு ரஜினிகாந்த் புகைப்படம் ) வைத்த காரணம் என்ன என்று அவரிடம் தற்பொழுது கேட்கப்பட்டது. அதற்கு அவர் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய தீவிர ரசிகன் என்று பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் சதமடித்து ரஜினிகாந்த் ஸ்டைலில் கொண்டாடினார். டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாளன்று சட்டீஸ்கர் அணிக்கு எதிராக சதம் அடித்த பின்னர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே தலை முடியை கோதி பின்னர் கூலிங்கிளாஸ் மாற்றுவது போல பாவனை காட்டி அவருடைய ஸ்டைலில் வெங்கடேஷ் ஐயர் கொண்டாடிய வீடியோ சமூக வளைதளத்தில் பெரிய அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

இடதுகை ஆட்டக்காரரான வெங்கடேஷ் ஐயருக்கு கிரிக்கெட் வீரர்களில் மிகவும் பிடித்த வீரர் சவுரவ் கங்குலி. அதேபோல வெங்கடேஷ் ஐயர் அலிஸ்டர் குக் மீது அலாதி பிரியம் வைத்திருக்கிறார். மேற் கூறியவர்கள் இடது கை ஆட்டக்காரர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்

என் பெற்றோர்கள் என்னிடம் சொன்ன விஷயம்

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நான் தேர்வான செய்தியை எனது பெற்றோரிடம் நான் கூறினேன். அவர்கள் என்னை வாழ்த்தி, என்னுடைய ஆட்டத்தில் கவனம் செலுத்துமாறும், நாட்டுக்காக சிறப்பாக ஆடுமாறு அறிவுரை கூறினார்கள்.

இந்த ஆண்டு உங்களது திட்டம் என்ன எந்த கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்னுடைய திட்டத்தில் நான் எப்பொழுதும் போல உறுதியாக இருக்க போகிறேன் என்று கூறியுள்ளார்”. மேலும் பேசிய அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்றும், இந்திய அணிக்காக நீண்ட நாட்கள் என்னுடைய கிரிக்கெட்டை விளையாடுவதே என்னுடைய லட்சியம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக அணி நிர்வாகம் என்னை எந்த இடத்தில் களம் இறங்கி விளையாட சொன்னாலும், அந்த இடத்திற்கு ஏற்ப என்னுடைய சிறப்பான ஆட்டத்தை நான் எப்பொழுதும் வெளிப்படுத்த தயார் என்று நம்பிக்கையுடன் கூறி முடித்தார்.