வேகம் இருக்கு.. இந்த ஒரு விஷயம் மட்டும் கூடுதலாக உன்னுடன் இருந்தால் நீ தான் டாப் பவுலர் – உம்ரான் மாலிக்கு அட்வைஸ் கொடுத்த ஷமி!

0
553

உன்னிடம் வேகம் இருக்கும் அளவிற்கு விவேகமும் வேண்டும் என்று உம்ரான் மாலிக்கிற்கு அறிவுரை கூறியுள்ளார் ஷமி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக வேகத்தில் அசத்தி வரும் உம்ரான் மாலிக் சமீபத்தில் இலங்கை அணி உடன் நடந்து முடிந்த ஒருநாள் தொடரின்போது 156 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி அதிவேகமாக பந்து வீசிய இந்திய வீரர் என்கிற சாதனையை படைத்தார்.

இதுவரை இந்திய அணிக்காக ஆறு டி20 போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள உம்ரான் மாலிக், தனது அதிவேக பந்துவீச்சால் பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்தாலும் அவ்வபோது தவறான பந்துகள் வீசி நிறைய ரன்களையும் வாரிக் கொடுக்கிறார் என்கிற விமர்சனங்கள் அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக டெத் ஓவர்களில் இப்படி ரன்களை வாரிக்கொடுப்பதால் இந்திய அணிக்கு கையில் இருந்த ஆட்டம் சில நேரங்களில் எதிரணிக்கும் நழுவி சென்று இருக்கிறது.

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு அனுபவ வீரர் முகமது சமி மற்றும் உம்ரான் மாலிக் இருவரும் உரையாடல்கள் நடத்தினர். அப்போது முகமது சமி தனது அனுபவத்திலிருந்து சில விஷயங்களை உம்ரான் மாலிக்கிற்கு பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக,

“உன்னிடம் நிறைய வேகம் இருக்கிறது. அதை பயன்படுத்தி எளிதாக பேட்ஸ்மேன்களை கணிக்க விடாமல் செய்து விக்கெட்டுகள் எடுக்கலாம். உலகின் சிறந்த பந்துவீச்சாளராக வரவேண்டும் என்றால், வேகம் இரண்டாம் பட்சமாக இருக்க வேண்டும். உனது லைன் மற்றும் லென்த் இரண்டும் மிகவும் துல்லியமாக இருந்தால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும். அத்துடன் சேர்ந்து வேகமும் இருந்தால் உலக தரமிக்க நம்பர் ஒன் பவுலராக வர முடியும். உன்னிடம் வேகம் இருக்கிறது. விவேகம் சற்று குறைவாக இருக்கிறது. லைன் மற்றும் லென்த் இரண்டிலும் கூடுதலாக கவனம் செலுத்தி தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொள். நிச்சயம் உன்னால் முடியும். அத்தனை தகுதிகளும் உன்னிடம் இருக்கிறது.” என அறிவுறுத்தினார்.