“இவங்க ரெண்டு பேரையும் அவுட் பண்ணா இந்தியா டீம் பாதி காலி” – ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன்!

0
1500
Afgan

ஆப்கானிஸ்தான் அணி இன்று கிரிக்கெட் உலகில் எட்டியிருக்கும் உயரங்களுக்குக் காரணமான வீரர்களில் அந்த அணியின் முன்னாள் கேப்டனான அஸ்கர் ஆப்கனும் ஒருவர். வலது கை பேட்ஸ்மேனான இவர் ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.

2009ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்காக அறிமுகமான இவர், 2021 ஆம் ஆண்டு நமிபியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

தற்போது இவர் ஆப்கானிஸ்தானை விட்டு இந்தியாவில் வசித்து வருகிறார். முன்னாள் வீரர்கள் பங்குபெறும் லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்காக கௌதம் கம்பீர் தலைமையில் விளையாட காத்திருக்கிறார். இவரிடம் ஆப்கானிஸ்தான் அணி குறித்தும் இந்திய அணி குறித்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதற்கு திறந்த மனதோடு அவர் பதிலளித்தார்.

கேள்வி: ஆசியக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அஸ்கர் ஆப்கான்: எங்களுக்குப் பெரிய பிரச்சனை போட்டி அட்டவணை தான். நாங்கள் பெரிய அணிகளோடு அடிக்கடி விளையாடுவது இல்லை. இதனால்தான் நெருங்கிய போட்டிகளில் கடைசி ஓவர் வரை செல்லும் போட்டிகளில் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்தது. முன்னணி அணிகளோடு தொடர்ந்து விளையாடாவிட்டால் இது தொடர்ந்து நடக்கும். இறுதிவரை போட்டியை எடுத்துச் செல்வோம் ஆனால் அதனை வெற்றிகரமாக முடிக்கவே முடியாது. உலகத்தரம் வாய்ந்த அணிகளோடு விளையாடாவிட்டால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களை உருவாக்க முடியாது. நாங்கள் வருடத்தில் ஒருமுறை மட்டுமே உலகத்தரமான அணிகளோடு விளையாடுகிறோம். அதுவும் பல அணிகள் பங்குபெறும் பெரிய தொடர்களில் மட்டுமே. இது போன்ற விஷயங்கள் எங்களை மேம்படுத்திக்கொள்ள ஒருபோதும் உதவாது.

- Advertisement -

கேள்வி: நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள் அதனால் உங்களிடம் இந்திய கிரிக்கெட் பற்றி கேட்காமல் இருப்பது அநியாயம். விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு எதிராக நீங்கள் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளீர்கள். டி20 கிரிக்கெட்டில் அவர்களது அணுகுமுறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அஸ்கர் ஆப்கான் : ஒரு வீரர் சரியாக விளையாடாத பொழுது, அதுகுறித்து அவரைச்சுற்றி பேச்சுகள் உருவாகும். இது கிரிக்கெட்டில் ஒரு அங்கம். ஆனால் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒவ்வொரு முறை விளையாடும் பொழுதும், எங்களது திட்டம் ரோகித் சர்மா விராட் கோலியை சுற்றியே இருக்கும். அவர்கள் இருவரையும் சீக்கிரத்தில் வெளியேற்றுங்கள் நம் வேலை பாதி முடிந்து விட்டது என்றுதான் நாங்கள் சொல்வோம். இந்த இரண்டு பெரிய வீரர்களுக்கு எதிராக உலகமே இப்படித்தான் திட்டமிடுகிறது. அவர்களால் தனி ஒரு வீரராக அணிக்காக ஆட்டத்தை வெல்லமுடியும். ஆரம்பத்திலேயே அவர்களைத் தாக்குவது தான் எங்களது திட்டம். ஏனென்றால் அவர்கள் களத்தில் நிலைத்து விட்டால் அதற்குப் பிறகு அவர்களை வெளியேற்றுவது மிகக் கடினம். குறிப்பாக விராட் கோலி. அவர் களத்தில் நிலைத்து விட்டால் பிறகு எல்லாமே கடினம். ஒருநாள் போட்டிகளில் அவர்களை சீக்கிரம் வெளியேற்றினால் இந்திய அணி 100-120 ரன்கள் குறைவாக எடுக்கும். அதே டி20 போட்டி என்றால் 60-70 ரன்கள் குறைவாக எடுக்கும்.