“சச்சின் பேசினா பேசிட்டே இருப்பாரு” – ஸ்ரேயாஸ் சுவாரசிய தகவல்கள்!

0
488
Sachin

இந்திய கிரிக்கெட்டை மட்டுமல்லாது உலக கிரிக்கெட்டையே சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் என்று பிரிக்கலாம். அந்த அளவுக்கு அவர் பேட்டிங் தொழில்நுட்பத்தில் யாராலும் எட்ட முடியாத நுட்பத்தைக் கொண்ட அதிசிறந்த தனித்துவமான பேட்ஸ்மேன்!

ஒரு பந்து பந்துவீச்சாளரின் கையிலிருந்து புறப்பட்ட பின் அந்தப் பந்தை எப்படி விளையாட வேண்டும் என்று குறைந்தது மூன்று வகைகளில் சிந்திக்க கூடிய ஆற்றல் இருந்த ஒரே வீரர் சச்சின் மட்டும்தான். இதையெல்லாம் தாண்டி ஒரு பந்துவீச்சாளர் தரும் எளிதான பந்தை அடிக்காமல் விடுவதற்கு அவரிடம் மட்டும்தான் ஒரு அற்புதமான காரணம் இருந்தது. பந்துவீச்சாளர் செட் செய்வதற்கு ஏற்றபடி ஒருபோதும் விளையாடக் கூடாது என்று, அதனால் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர் எளிதான பந்தை தந்தால் அதை அடித்து, மூளையை அதன் புறம் நகர்த்த கூடாது என்கின்ற அளவுக்கு எல்லாம் அவர் கிரிக்கெட்டை அவ்வளவு புத்திசாலித்தனமாக அணுகினார்!

தற்போது இந்திய அணியில் குறிப்பாக ஒருநாள் அணியில் மிக வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரராக ஸ்ரேயாஸ் இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணிக்கு பல வீரர்களை தந்த மும்பையில் இருந்து வந்த மற்றும் ஒரு வீரர் இவர்.

தற்பொழுது சச்சின் குறித்தும் சச்சினை தான் எப்பொழுது முதன்முதலாக சந்தித்தேன் என்பது குறித்தும் அப்பொழுது சச்சின் என்னவெல்லாம் பேசினார் என்பது குறித்தும் சில சுவாரசிய தகவல்களை கூறியிருக்கிறார்!

இது பற்றி பேசி உள்ள ஸ்ரேயாஸ்
“எனக்கு அப்போது 14 வயது. அப்பொழுது சச்சின் சார் ஒரு மோட்டிவேஷனல் ஸ்பீச் தருவதற்காக பிகேசிக்கு வந்திருந்தார். இதுதான் நான் அவரை முதன் முதலாக பார்த்த தருணம். இதற்கு அடுத்து ஒரு ரஞ்சி இறுதிப் போட்டியின் போது அவருடன் எனக்கு பேசுவதற்கு கொஞ்சம் நேரம் கிடைத்தது ” என்று கூறியுள்ளார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” சச்சின் அவர்கள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் கிரிக்கெட்டின் மீது இருந்த ஈடுபாடும் காதலும் அவருக்கு கொஞ்சம் கூட குறையவில்லை. கிரிக்கெட் குறித்து பேசினால் அவர் பேசுவதை நிறுத்தவே மாட்டார். அவரிடம் இருந்து எண்ணற்ற டிப்ஸ்கள் வந்து கொண்டே இருக்கும். நான் அவரிடம் எப்படி நான் விளையாட வேண்டும் என்று கேட்டபோது, அவர் என்னிடம், இன்றைய நாளுக்கு எப்படி விளையாடினால் சரியாக இருக்கும் என்று உனக்குத் தோன்றுகிறதோ அதை அப்படியே செய் என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்!