கே.எல்.ராகுல் கிடையாது ; ரோஹித் ஷர்மாவுக்கு பின் இவர் தான் கேப்டன் பதவிக்கு சரியானவர் – வாசிம் ஜாபர் நம்பிக்கை

0
182
Rohit Sharma and Wasim Jaffer

இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் நடந்து முடிந்த பொழுது, பெரும்பாலானவர்களின் ப்ளேஆப்ஸ் கணிப்பில் இல்லாத ஒரு அணி என்றால் அது ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிதான். பத்து அணிகளில் பத்தாவது இடத்தையே முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் விமர்சகர்களில் பவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கொடுத்திருந்தினர். ஐ.பி.எல் மெகா ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருந்த, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ராவின் செயல்பாடு பலராலும் விமர்சிக்கப்பட்டது!

எந்தவித பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் ஐ.பி.எல் தொடருக்குள் புதிய அணியாய் வந்ததோடு, ஐ.பி.எல் தொடரின் முன்னணி அணிகளை எல்லாம் மிகச்சுலபமாய் வீழ்த்தி, புள்ளிபட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, முதல் அணியாய் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது. நுழைந்ததோடு இல்லாமல் இறுதி ஆட்டத்தில் வென்று கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தற்காலிகமாகத் தானாகவே இந்திய அணியில் இருந்து ஒதுங்கி இருந்த ஹர்திக் பாண்ட்யா, சிறிய இடைவெளிக்குப் பின் இந்த ஐ.பி.எல் தொடரில்தான் திரும்பி வந்தார். வந்தவர் பேட்டிங்கில், பவுலிங், பீல்டிங் என ஒரு கேப்டனாய் அணியை முன்நின்று சிறப்பாக வழிநடத்தி கோப்பையையும் வென்றார். இறுதி ஆட்டத்தில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

இந்த நிலையில் ஐ.பி.எல் முடிந்து தென்ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடருக்குத் தேர்வாகி விளையாடி வருவபரை, அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதே நேரத்தில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹர்திக் பாண்ட்யாவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறித்து, இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் “என் கருத்து என்னவென்றால்; அவர் ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக அணியைச் சிறப்பாக வழிநடத்தினார். அவர் அணியை முன்நின்று எடுத்துச் செல்வதை விரும்பி செய்கிறார். ரோகித் சர்மா இல்லாத பொழுது, இந்திய அணியின் வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் தேர்வில், ஹர்திக் பாண்ட்யா பெயர்தான் முதலில் இருக்க வேண்டும். அடுத்து அவரே துணை கேப்டனாகவும் இருக்க வேண்டும். ரோகித் சர்மாவிற்குப் பிறகு வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்ட்யா சரியாக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்!