பூரன் முடிஞ்சா என்னை அடிக்கட்டும்.. 4வது மேட்ச்ல வரட்டும் பாத்துக்கறேன் – ஹர்திக் பாண்டியா பூரனுக்கு நேரடி சவால்!

0
3474
Hardikpandya

இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோற்று, இன்று நடைபெற்ற முக்கியமான மூன்றாவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது!

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸில் வென்று தைரியமாக பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 159 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ரோமன் பவல் அதிரடியாக ஆட்டம் இழக்காமல் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஏமாற்ற, சூரியகுமார் 44 பந்துகளில் 83 ரன்கள், திலக் வர்மா 32 பந்துகளில் 49 ரன்கள் ஆட்டம் இழக்காமல் எடுக்க இந்திய அணி 17.5 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டி, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் நீடிக்கிறது.

போட்டிக்கு பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா
“இந்த வெற்றி மிகவும் முக்கியமானது. நாங்கள் எங்களை மீட்டுக் கொள்ள வேண்டியதாக இருந்தது. இரண்டு தோல்விகள் அல்லது இரண்டு வெற்றிகள் எங்களை எதுவும் செய்யாது. எங்களிடம் ஒரு நீண்ட காலத்திட்டம் இருக்கிறது. நாங்கள் எங்கள் கேரக்டர்களை வெளிப்படுத்துவது முக்கியம்.

சுழற் பந்துவீச்சாளர்கள் குறித்து எந்தத் திட்டமும் கிடையாது. பூரன் பேட்டிங் செய்ய வராததால் அவர்களை அதிகம் பயன்படுத்த நினைத்தோம். அக்சர் கடந்த போட்டியில் பந்து வீசவில்லை. அவர் முன்பே பந்து வீசினால் பின்பு சாகல் மற்றும் குல்தீப் இருவரும் இருப்பார்கள். இறுதியில் முகேஷ் மற்றும் அர்ஷ்தீப் சிறப்பாக முடித்தார்கள்.

- Advertisement -

நிக்கோலஸ் பூரன் அடிக்க விரும்பினால் என் பந்துவீச்சை அடிக்கட்டும். எனக்கு இந்த மாதிரியான போட்டி பிடிக்கும். அதே சமயத்தில் நான் பந்துவீச்சில் லைன் மற்றும் லென்த்தில் தவறு செய்ய மாட்டேன் என்று எனக்கு தெரியும். இது உற்சாகமானதாக இருக்கிறது. நான்காவது போட்டியில் அவர் என்னை பின்தொடர்ந்து வருவார் என்று நினைக்கிறேன்.

குழுவிற்குள் நம்மை நாம் நம்புவதும் மீட்டெடுப்பதும் முக்கியம். உள்ளது உள்ளபடிதான், எங்களுக்கு எட்டாவது இடத்தில் பேட்ஸ்மேன் கிடையாது. அந்த இடத்தில் எங்களுக்கு ஒரு பந்துவீச்சாளர் இருக்கிறார். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தை வென்று தருவார்கள். பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்தால் எட்டாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேனுக்கான தேவை இருக்காது.

சூர்யா மற்றும் திலக் இருவரும் புத்திசாலிகள். ஒன்றாக விளையாடுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருக்கிறார்கள். சூர்யாவைப் போல் சவால்களை விரும்பும் ஒருவரை கேப்டனாக நான் பெற்றிருப்பதில் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவன். மேலும் அவர் தாமாக பொறுப்புகளை ஏற்க விரும்புபவர். அவர் எங்கள் குழுவிற்குள் நிறைய நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்!” என்று கூறியிருக்கிறார்!