குல்தீப் அதிக விக்கெட் எடுக்காதே அப்புறம் டீம்ல எடுக்க மாட்டாங்க ; இந்திய கேப்டன் பயிற்சியாளரை தாக்கிய முன்னாள் இந்திய வீரர்!

0
2007
Kuldeep

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் காலத்தில் விரல் சுழற் பந்துவீச்சு பிரதானமாக இருந்தது. விரல் சுலபந்துவீச்சாளர்களாக இடது கை சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் கூட்டணி அமைத்து வந்தார்கள்!

மகேந்திர சிங் தோனி கேப்டன்சி காலத்திற்கு அடுத்து விராட் கோலி கேப்டன்சி காலத்தில் மணிக்கட்டு சுழற் பந்துவீச்சாளர்களான குல்தீப் மற்றும் சாகல் கூட்டணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

- Advertisement -

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவர்களது பந்து வீச்சு முறை எதிரணி வீரர்களுக்கு பழக்கமாக இவர்கள் ரண்களை விட்டுத்தர ஆரம்பித்தார்கள். இதில் சாகல் ஓரளவுக்கு தப்பிக்க குல்தீப் சிக்கிக்கொண்டார். மேலும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் இவரால் தன்னை நிரூபித்து இந்திய அணிக்குள் நுழைய பெரிய தடை உருவானது.

இதற்கு பிறகு கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இவரை வாங்கி வாய்ப்புகளை கொடுக்க மறுபிரவேசத்தில் இவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதைத்தொடர்ந்து இவருக்கு இந்திய அணியில் மீண்டும் வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த வாய்ப்பு வெள்ளைப் பந்து தாண்டி சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிவப்பு பந்திலும் தொடர்ந்தது. பங்களாதேஷ் அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் இவர் பேட்டிங்கில் 40 ரன்கள் எடுத்ததோடு, முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். ஆனால் அதற்கு அடுத்த இரண்டாவது டெஸ்டில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது!

- Advertisement -

தற்பொழுது இதைச் சுட்டிக்காட்டி இந்திய அணி நிர்வாகத்தை கிண்டலாக தாக்கும் விதமாக கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் டோட்டா கணேஷ் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் “குல்தீப் போதும். இதற்கு மேல் நீங்கள் விக்கெட்டுகளை எடுக்காதீர்கள். அப்படி நீங்கள் எடுத்தால் உங்களை அடுத்த ஆட்டத்தில் இவர்கள் தேர்வு செய்யாமல் போக அதிக வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் பேட் செய்யும் பொழுது குல்தீப் மிகச் சிறப்பாக பந்து வீசி மூன்று விக்கட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!