தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளித்தால் இவருக்கும் நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா வலியுறுத்தல்

0
143
Dinesh Karthik and Suresh Raina

நடப்பு ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் லீக் போட்டிகள் முழுதாய் 70 ஆட்டங்களும் முடிவடைந்து இருக்கிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய பழைய சாம்பியன் அணிகள் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறி இருக்கின்றன. இந்த ஐ.பி.எல் சீசனின் புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்து அசத்தி இருக்கின்றன. மேலும் பெங்களூர், ராஜஸ்தான் அணிகளும் ப்ளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன. பஞ்சாப் அணி வழக்கம்போல் நல்ல வீரர்களைத் தேர்ந்தெடுத்து, சூழ்நிலைக்கேற்ப விளையாடாமல் ப்ளேஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறாமல் விளிம்பில் வெளியேறி இருக்கிறது.

ஐ.பி.எல் வரலாற்றில் ஒரே ஒருமுறை மட்டுமே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள பஞ்சாப் அணி, அந்த ஆட்டத்திலும் கொல்கத்தா அணியிடம் கோப்பையைப் பறிக்கொடுத்தே இருக்கிறது. இந்த முறையாவது பழைய பாணி சொதப்பல்களை உதற, பஞ்சாப் அணி இந்த ஆண்டு நடந்த மெகா ஏலத்தில் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு, சிறந்த வீரர்களையே அணிக்குள் கொண்டுவந்திருந்தது. குறிப்பாக மயங்க் அகர்வாலோடு துவக்க ஆட்டக்காரராக ஷிகர் தவானை வாங்கியது மிகச்சிறந்த நகர்வு.

- Advertisement -

ஷிகர் தவான் ஐ.பி.எல் தொடரில் கடந்த 12 ஆண்டுகளாக 300 ரன்களுக்கு கீழாக அடித்ததில்லை. இதில் நான்கு 400+ ரன்களும், நான்கு 500+ ரன்களும், ஒரு 600+ ரன்களும் அடங்கும். மூன்று 300+ ரன்களும் அடங்கும். 2016ஆம் ஆண்டிலிருந்து ஷிகர் தவான் 400+ ரன்களுக்கு குறைவாக ஐ.பி.எல் சீசனில் அடித்ததில்லை. இந்த ஐ.பி.எல் சீசனில் 14 போட்டிகளில் 460 ரன்களை அடித்திருக்கிறார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை எடுத்துக்கொண்டால் ஷிகர் தவானின் பேட்டிங் பார்ம் என்பது மிகவும் சீராகவே இருந்து வருகிறது. அவரது பேட்டிங் தொழிற்நுட்பமும், அனுபவமும் வருடத்திற்கு வருடம் உயர்ந்துகொண்டேதான் வருகிறது.

இடக்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இளம் வீரர் இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு, ஷிகர் தவானுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டு வந்தது. இந்த முறையும் ஷிகர்தவான் சிறப்பாகச் செயல்பட்டு இருப்பதாலும், சில முக்கிய வீரர்களுக்கு இந்தியா வரும் செளத்ஆப்பிரிக்கா உடனான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் ஓய்வு தரப்படும் என்பதாலும், மீண்டும் இந்திய இருபது ஓவர் கிரிக்கெட் அணியில் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு கிடைக்குமென்றே பலராலும் உறுதியாய் நம்பவேபட்டது. ஆனால் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இந்திய அணியில் நுழைய, சரியான பேட்டிங் பார்மில் இல்லாத இஷான் கிஷானுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட்டு, மீண்டும் ஷிகர் தவானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இதுக்குறித்து பேசியுள்ள இந்திய அணியின், சி.எஸ்.கே அணியின் பிரபல முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது “நிச்சயமாக அவர் ஏமாற்றம் அடைந்திருப்பார். அவர் சுற்றுப்புறத்தை சந்தோசமாக்கும் வேடிக்கையான மனிதர். உள்நாட்டு கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் என அவர் தொடர்ந்து எப்போதும் ரன் அடித்துள்ளார். தினேஷ் கார்த்திக்கை அணியில் எடுத்துள்ளது போல, ஷிகர் தவானையும் அணியில் எடுத்திருக்க வேண்டும். கடந்த இரண்டு மூன்று வருடமாக இடைவிடாது ரன்கள் குவித்து வருகிறார். இதனால் அவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பார்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -