அஸ்வினை அணியை விட்டு நீக்கும் போது ஏன் விராட் கோலியை நீக்கக் கூடாது ? கபில் தேவ் கேள்வி

0
244
Kapil Dev and Virat Kohli

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் என்பதைத் தாண்டி, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ரன் மெஷினாக உலக கிரிக்கெட்டில் வலம் வந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி. அவரது பேட்டில் இருந்து கடைசியாகச் சதம் வந்தது 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம். தற்போது சதமற்ற மூன்றாவது ஆண்டை நிறைவு செய்ய நடுவில் மூன்று மாதங்களே இருக்கிறது!

கோவிட் தொற்றுக்காலம் முடிந்து அவரது பேட்டில் இருந்து சதங்களால் வராமல் போனாலும் அரைசதங்கள் வந்தபடியே இருந்தன. ஆனால் நாளாக நாளாக அவரது பலகீனமாகப் பார்க்கப்பட்ட லெக்-ஸ்பின் பந்துவீச்சு, ஆப்-ஸைட் வெளியே செல்லும் பந்துகளில் தொடர்ந்து ஆட்டமிழந்தார். அவரது தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழ ஆரம்பித்தது. அவரது பேட்டிங்கில் முன்பு இருந்த உறுதிதன்மை, தைரியம் இல்லாமல் போனது. பந்துகளை அரைகுறை மனதுடன் ஆட அணுகி விக்கெட்டை பறிகொடுத்தார்.

- Advertisement -

பின்பு இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து அரைசதங்களும் அவரது பேட்டில் இருந்து வருவது நின்றது. இதைவிட பெரிய அதிர்ச்சியாக சந்தித்த முதல் பந்தில் மட்டுமே மூன்று முறை கோல்டன் டக் அடித்தார். 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக ஐ.பி.எல் ரன் சராசரியில் 20க்கும் கீழ் குறைந்தார். பின்பு கடைசி சில ஆட்டங்களில் ஒரு அரைசதமெல்லாம் வர ரன் சராசரி 20க்கு அதிகமானது. ஆனால் அவரது வழக்கமான பேட்டிங் திரும்பவில்லை.

இந்த நிலையில் இதற்கடுத்த செளத் ஆப்பிரிக்க அணியுடனான டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மாவோடு சேர்த்து விராட்கோலிக்கும் ஓய்வளிக்கப்பட்டது. இரண்டு டி20 போட்டிகளில் விளையாட அயர்லாந்திற்கு ஒரு இந்திய அணி செல்ல, இங்கிலாந்தில் விளையாட ரோகித் சர்மா தலைமையில் சென்ற இந்திய அணியில் விராட் கோலி சென்றார். அங்கு அயர்லாந்து அணியுடனான டி20 ஆட்டத்தில் இஷான் கிஷான், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. குறிப்பாகச் சதம் விளாசிய தீபக் ஹூடாவின் ஆட்டம்.

இந்த நிலையில் இங்கிலாந்துடன் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் இருபது ரன்களை தாண்டவில்லை. மேலும் டெஸ்ட் விளையாடியதால் இங்கிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை. அடுத்து இரண்டு டி20 போட்டியிலும், மூன்று ஒருநாள் போட்டியிலும் விராட் கோலி விளையாடுகிறார். இதில் அவரது செயல்பாட்டைப் பொறுத்தே இந்திய டி20 அணியில் இனி வாய்ப்பு அமையும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதுதொடர்பாகப் பேசியுள்ள உலகக்கோப்பையை வென்ற இந்திய கேப்டன் கபில் தேவ் “சிலர் ஓய்வு என்று சொல்லலாம். சிலர் நீக்கம் என்று சொல்லலாம். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஒரு வீரர் சரியாக விளையாடாத போது, தேர்ந்தெடுக்க நிறைய வீரர்கள் இருக்கும் போது, அந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு வீரர் அவரது பழைய பெயரை வைத்துக்கொண்டு அணியில் நுழைய முடியாது. அவரது தற்போதைய பார்ம் முக்கியம். விராட்கோலி சிறப்பாக விளையாடுவதாலே அறியப்பட்டவர். அவர் பழையபடி ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்குப் பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தந்து போட்டியை உருவாக்க வேண்டும். ஒருவருக்கு ஐந்து போட்டிகளில் வாய்ப்பு தந்தால் தொடர்ந்தும் தருவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. உலகின் நம்பர் 2 பவுலர் அஷ்வினை டெஸ்ட் அணியிலிருந்து நீக்கும் போது, உலகின் நம்பர் 1 பேட்டர் விராட்கோலியை ஏன் டி20 அணியிலிருந்து நீக்க கூடாது?!” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்!