ஐசிசி 2021ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் பட்டத்திற்கு தேர்வாகியுள்ள 4 வீரர்கள் – ஒரே ஒரு இந்திய வீரர் மட்டுமே இடம்பிடிப்பு

0
1944
Joe Root and Kyle Jamieson

ஐசிசி ஒவ்வொரு வருடமும் சிறந்த டெஸ்ட் வீரரை அறிவிப்பது வழக்கமான விஷயம். 2004 முதல் இந்த பட்டத்தை ஒவ்வொரு வருடமும் ஐசிசி கொடுத்து வருகிறது. 2004ஆம் ஆண்டு இந்த சிறந்த டெஸ்ட் வீரர் பட்டத்தை முதல் முறையாக ராகுல் டிராவிட் பெற்றார். இந்த பட்டத்தை அதிகமாக இரண்டு முறை (2015 மற்றும் 2017ஆம் ஆண்டில் ) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஸ்மித் பெற்றிருக்கிறார்.

கடந்த ஆண்டு இந்த பட்டம் யாருக்கும் வழங்கப்படாத நிலையில் இந்த வருடம் ஐசிசி முன்புபோல வழங்குகிறது. இந்த பட்டத்திற்கு தகுதியான வீரர்களாக தற்பொழுது 4 பேர் தேர்வாகியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரர் பட்டத்திற்கு ஜோ ரூட், ரவிச்சந்திரன் அஸ்வின், கைல் ஜேமிசன் மற்றும் டிமுத் கருணரட்னே ஆகிய நான்கு வீரர்கள் தற்பொழுது தேர்வாகியுள்ளனர்.

ஜோ ரூட்

இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இந்த ஆண்டு 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட 1708 ரன்கள் குவித்துள்ளார். இந்த வருடம் அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 61.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 56.85 ஆகும். அதே சமயம் இவர் 14 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிமுத் கருணரட்னே

ஜோ ரூட்டுக்கு அடுத்தபடியாக இலங்கையைச் சேர்ந்த டிமுத் கருணரட்னே இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் உட்பட 902 ரன்கள் குவித்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய டெஸ்ட் பேட்டிங் ஆவெரேஜ் 69.38 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 55.74 ஆகும்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பேட்டிங்கில் இவர்கள் இருவரும் இந்த வருடம் அசத்தியது போலவே பௌலிங்கில் இரண்டு வீரர்கள் அசத்தியுள்ளனர். அதில் முதலாவதாக இந்திய அணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டு அவருடைய பௌலிங் அவரேஜ் 16.23 மற்றும் எக்கானமி 2.31 மட்டுமே ஆகும். பேட்டிங்கிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த ஆண்டு ஒரு சதத்துடன் மொத்தமாக 341 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

கைல் ஜேமிசன்

இந்த ஆண்டு இவர் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டு இவருடைய பௌலிங் ஆவெரேஜ் 17.51 மற்றும் எக்கானமி 2.51 ஆகும். இவரும் பேட்டிங்கில் நியூஸிலாந்து அணிக்காக 105 ரன்கள் மொத்தமாக இந்த ஆண்டு குவித்துள்ளார்

4 வீரர்களும் மிக சிறப்பாக இந்த ஆண்டு விளையாடிய நிலையில், இந்த ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரர் பட்டம் எந்த வீரருக்கு கிடைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.