வெளியானது புதிய ஐசிசி ரேங்க் பட்டியல்; பாபர்? கோலி?

0
241
ICC

தற்போது உலக கிரிக்கெட்டில் டி20 வடிவத்தில் 6 அணிகள் மோதிய ஆசிய கோப்பை தொடர் முடிவடைந்து அதில் இலங்கை அணி சாம்பியன் ஆகி இருக்கிறது. அதே சமயத்தில் ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே சாப்பல்-ஹாட்லி ஒருநாள் தொடர் நடைபெற்றது இதில் ஆஸ்திரேலியா 3-0 என தொடரைக் கைப்பற்றியது. இதேபோல் இங்கிலாந்து சவுத் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என கைப்பற்றி இருக்கிறது.

தற்போது உலக கிரிக்கெட்டில், இந்த மூன்று முக்கியமான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களும் நடந்து முடிந்துள்ளன. இதை அடுத்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டு உள்ளது. மற்ற இரண்டு கிரிக்கெட் வடிவங்களில் பெரிய மாறுதல்கள் இல்லை என்றாலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் வீரர்களுக்கான தரவரிசையில் பெரிய மாற்றங்கள் இருக்கிறது.

- Advertisement -

நடந்து முடிந்த ஆசியக் கோப்பை தொடரின் போது, தனது பேட்டிங் கூட்டாளி பாபர் ஆஸமை 1155 நாட்களுக்குப் பிறகு 20 கிரிக்கெட் வடிவத்தில் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் என்ற அரியணையில் இருந்து இறக்கி முஹம்மது ரிஸ்வான் அந்த அரியணையில் அமர்ந்து அப்படியே தொடர்கிறார். தற்பொழுது பாபர் மூன்றாம் இடத்திற்கு சரிந்து இருக்கிறார். இரண்டாம் இடத்தில் எந்த போட்டியிலும் விளையாடாத தென் ஆப்பிரிக்காவின் இடம் மார்க்ரம் தொடர்கிறார். இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் தொடர்கிறார்!

மூன்று வருடங்களுக்குப் பிறகு சர்வதேச சதத்தை ஆசியக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கொண்டுவந்த விராட் கோலி இந்தத் தொடரில் மொத்தமாக 276 ரன்கள் குவித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 15வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

இதேபோல் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் இலங்கை அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் பங்களிப்பு செய்த ஹசரங்கா டி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் மூன்று இடங்கள் உயர்ந்து ஆறாவது இடத்தையும், டி20 போட்டி ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7 இடங்கள் உயர்ந்து நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த இங்கிலாந்து-சவுத் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு அடுத்து இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஒல்லி போப் 17 இடங்கள் முன்னேறி இருபத்தி ஒன்பதாவது இடத்தை பிடித்தார். தொடரை யாருக்கு என்று நிர்ணயிக்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் முக்கியமான இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன் 11 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் பெற்றார்.

அதே சமயத்தில் இதே டெஸ்ட் தொடரில் பேட்டிங் மற்றும் வேகப்பந்து வீச்சில் அசத்திய தென் ஆப்பிரிக்காவின் யான்சன் டெஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 8 இடங்கள் முன்னேறி இருபத்தி ஆறாவது இடத்தைப் பெற்றார். அதேபோல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 6 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை பெற்றார்.

ஆஸ்திரேலியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு அடுத்து, மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஸ்டீவன் ஸ்மித் 13 இடங்கள் முன்னேறி 10வது இடத்தை ஒருநாள் பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பெற்றார். மிச்செல் ஸ்டார்க் ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் பட்டியலில் 9வது இடத்தை பெற்றார். நியூசிலாந்து அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் இதில் முதலிடத்தில் தொடர்கிறார்!