டி20 போட்டியில் 24 பந்தையும் மெதுவாக வீச நான் வெட்கப்பட மாட்டேன் – ஹர்சல் படேல் அதிரடி கருத்து!

0
159

2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி, ஒரு ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையைப் படைத்து, அதன் மூலமாக இந்திய அணிக்குள் வந்தவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்சல் படேல்!

இவரது மெதுவான பந்துகளை பேட்ஸ்மேன்கள் அடிப்பது மிகவும் கடினமான ஒரு காரியமாக இருந்தது. அப்படியான பந்தை நேரம் தவறி அடிக்கப் போய் அது காற்றில் கிளம்பி கேட்ச்சாக மாறி பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழப்பார்கள். காற்றில் உயரமாக வந்து கொண்டிருக்கும் இவரது சில பந்துகள் திடீரென்று உயரத்தை இழந்து அப்படியே விழும், இப்படியான பந்துகள் எல்பிடபிள்யூ மற்றும் போல்ட் முறையில் பேட்ஸ்மேனை ஆட்டம் இழக்கச் செய்யும்.

- Advertisement -

இந்தச் சிறப்பு திறமையால் இந்திய அணியில் மற்றும் ஐபிஎல் அணியில் இவர் பவர் பிளே முடிந்து ஒரு ஓவர் வீசுவார். இல்லையென்றால் பெரும்பாலும் 10 ஓவர்களுக்குப் பிறகு, பேட்ஸ்மேன்கள் அடித்து ஆட நினைக்கும் நேரத்தில், இவர் தனது மொத்த 4 ஓவர்களையும் ரன்கள் பெரிதும் தராமல் வீசி, அணியின் வெற்றிக்கு மிகவும் துணையாக இருப்பார். ஆனால் சமீப சில மாதங்களாக இவரது பந்து வீச்சில் ரன்கள் அதிகமாய் கசிந்து கொண்டே இருக்கிறது. அதற்கு இவர் தொடர்ந்து மெதுவான பந்துக்களை வீசுவதும், அதை தவறான அளவில் வீசுவதும் காரணம் என்று கருதப்படுகிறது.

தற்பொழுது இவரது மெதுவான வேகப்பந்து வீச்சு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஹர்ஷல் படேல் கூறும்பொழுது ” நான் வேகமாக பந்து வீசத் தேவையில்லை என்று கருதும் சில ஆடுகளங்கள் அமையும். ஒரு வேகப்பந்து வீச்சாளராக நீங்கள் மணிக்கு 135 முதல் 140 கிலோமீட்டர் வரை வேகம் மீட்டர் போவதை விரும்புவீர்கள். என்னால் இந்த வேகத்தில் வீச முடியும். உங்களின் விருப்பம் இதுவாகத்தான் இருக்கும். வீசப்படும் பந்து விக்கெட் கீப்பரின் கையுறையை போய் அடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நான் ஆட்டத்தின் 24 பந்துகளையும் மெதுவாக வீச வெட்கப்பட மாட்டேன் ” என்று கூறியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய ஹர்ஷல் படேல் “நான் எனது வேலையை திறமையாக எப்படி செய்ய வேண்டும் என்பது முக்கியம். சில ஆடுகளங்களில் மெதுவாக வீச முடியாது என்று நான் உணர்ந்து இருக்கிறேன். நிமைகளுக்கு ஏற்ப நீங்கள் சரியாக செயல்பட வேண்டும். கடந்த ஐபிஎல் தொடரில் டிஒய்.பாட்டில் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆண்ட்ரு ரசல் மற்றும் சாம் பில்லிங்ஸ் இருவருக்கு எதிராக இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசினேன். அந்த ஆட்டத்தில் நான் முதலில் பந்து வீசும் பொழுது ஒரு ஹார்ட் லென்த்தில் பந்தை அடிக்கும் பொழுது, பந்து மெதுவாக ஏறியது. நான் ஆடுகளம் மெதுவாக வீசுவதற்கு அல்ல வேகமாக வீசுவதற்கு என்று உணர்ந்து கொண்டேன். அந்த ஆட்டத்தில் நான் ஒரு பந்தை கூட மெதுவாக வீசவில்லை. சூழ்நிலைகளும், ஆடுகளங்களும் என்ன சொல்கிறதோ நான் அப்படித்தான் வந்து பேசுகிறேன் ” என்று விரிவாகக் கூறியிருக்கிறார்!

- Advertisement -