அதிர்ஷ்டத்திற்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் ; அதற்கு தலை வணங்குகிறேன்; – விராட் கோலியின் வித்தியாசமான வார்த்தைகள்!

0
1926
Viratkohli

மிக நவீன கிரிக்கெட் காலத்தில் ஒரு மரபான கிரிக்கெட் வீரர் உச்சத்தில் நின்று ஆதிக்கம் செலுத்துவது என்பது யோசித்துக் கூட பார்க்க முடியாத விஷயம். அப்படி சாத்தியமே இல்லாத விஷயத்தை சாத்தியமாக்கி உச்சத்தில் இருப்பவர்தான் விராட் கோலி!

மரபு கிரிக்கெட்டில் இருக்கக்கூடிய ஆபத்தான ஷாட்டான ஸ்வீப் ஷாட்டை கூட விராட் கோலி விளையாட மாட்டார். இப்படி இருக்க நவீன கிரிக்கெட் ஷாட்கள் பக்கமே அவர் போக மாட்டார். ஆனாலும் அவர் ரண்களில் செய்துள்ள சாதனையை எந்த நவீன கிரிக்கெட் பேட்ஸ்மேன்களும் நெருங்கக் கூடிய இடத்தில் கூட இல்லை என்பதுதான் ஒரு ஆச்சரியமான முரண்!

இன்று இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி அதிரடியாக 80 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

விராட் கோலிக்கு இந்த சதம் ஒரு நாள் போட்டியில் 45 வது சதமாகும். சர்வதேச அளவில் இது அவருக்கு 73 வது சதமாகும். சச்சினின் சதங்களின் சாதனையை எட்டிப் பிடிக்க ஒரு சின்ன இடைவெளி கொடுத்து இருந்த விராட் கோலி மீண்டும் சுதாரித்து வேகமாக ஓட ஆரம்பித்துவிட்டார்.

இன்றைய போட்டியில் சதம் அடித்த பிறகு பேசிய விராட் கோலி வழக்கத்திற்கு மாறான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி உள்ளார். எப்பொழுதும் தீவிரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடியவரான விராட் கோலி இன்று அதிர்ஷ்டத்திற்கு தலைவணங்குகிறேன் என்றும் பேசி இருப்பது அவர் மிகவும் பக்குவப்பட்டு முதிர்ச்சியாகி இருக்கிறார் என்று காட்டுகிறது!

விராட் கோலி கூறும் பொழுது
” இந்தப் போட்டிக்கு முன்பு எனக்கு சிறிது இடைவெளி இருந்தது எனக்கு இரண்டு பயிற்சி அமர்வுகள் கிடைத்தது. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு பிறகு நான் இங்கு புதிதாகப் புத்துணர்ச்சியோடு வந்திருக்கிறேன். பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் இரண்டாவது பகுதியில் என்னால் திட்டமிட முடியவில்லை. நான் இந்தியாவில் நடக்கும் தொடர்களை எதிர்பார்த்து இருந்தேன். நான் எப்பொழுதும் போல இன்னிங்ஸை கட்டமைக்கும் முறையில் பேட்டிங் செய்ய வேண்டி இருந்தது ஆனால் நான் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி இருக்கிறேன். ஆட்டத்தின் வேகத்திற்கு ஏற்றபடி என்னால் ரன்கள் குவிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”
என்று கூறியிருக்கிறார்

மேலும் தொடர்ந்து பேசிய விராட் கோலி
” 340 ரண்களுக்கு மேலாக 370 ரன்கள் எடுக்க முடிந்ததில் எங்களுக்கு எங்கள் திட்டம் நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சி. விளையாட்டில் அதிர்ஷ்டமும் முக்கியமானது. அதுவும் ஒரு பங்கை வகிக்கிறது. அதற்கு நான் நன்றி உள்ளவனாக இருப்பேன். அதற்கு நான் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதைத் தாண்டி நாங்கள் கூடுதலாக ஒரு 30 ரன்கள் எடுத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் இங்கு பனி இருக்கும் அதனால் இரண்டாவது பகுதியில் பந்து வீசுவது கடினம். மேலும் நானும் ரோகித்தும் நல்ல ரிதத்தில் இருந்தோம். இருவரும் நல்ல ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடினோம்” என்று கூறி இருக்கிறார்!