சிராஜ் 5 விக்கெட் எடுக்கணுன்னு எனக்கும் ரொம்ப ஆவலா இருந்துச்சு, இந்த பையன்கிட்ட ஏதோ இருக்குங்க – ரோகித் சர்மா புகழாரம்!

0
675

முகமத் சிராஜிடம் தனித்துவமான திறமை இருக்கிறது என புகழ்ந்திருக்கிறார் ரோகித் சர்மா.

இந்தியா இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. சம்பிரதாயபடி நடத்தப்பட்ட மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் அடித்து அசத்தினர்

ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் கொடுத்த அதிரடியான ஓபனிங் இந்திய அணிக்கு 50 வது ஓவர் வரை நிற்கவில்லை. இதன் மூலம் 50 ஓவர்கள் முடிவில் 390 ரன்கள் அடித்தது.

மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த இலங்கை அணிக்கு சிராஜ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார். அடுத்து வந்த முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோரின் சூழலில் இலங்கை அணி 73 ரன்களுக்கு சுருண்டது.

இறுதியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமாக, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. சிராஜ் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐந்தாவது விக்கெட் கைப்பற்றுவதற்கு கடைசி வரை போராடினார். துரதிஷ்டவசமாக, அது கிடைக்கவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு முகமது சிராஜ் பற்றி பேசிய ரோகித் சர்மா கூறுகையில்,

“சிராஜிடம் தனித்துவமான திறமை இருக்கிறது. அதிகமான விமர்சனங்களை சந்தித்த பிறகு கடந்த சில வருடங்களாக இந்திய அணிக்கு அபாரமாக செயல்பட்டு வருகிறார். மூன்று வித போட்டிகளிலும் விளையாடக்கூடிய திறமையான வீரர். இந்திய கிரிக்கெட்டிற்கு இது மிகப் பெரிய பலமாக இருக்கும்.

சிராஜ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று நான் ஆவலுடன் காத்திருந்தேன். துரதிஷ்டவசமாக அது நடக்காமல் போனது. எனக்கும் வருத்தம் அளிக்கிறது. ஆனால் இதேபோன்று தொடர்ந்து செயல்பட்டு வந்தால் அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் அதை நிகழ்த்த முடியும். நல்ல பவுலிங் ட்ரிக்ஸ் வைத்திருக்கிறார் அது நன்றாக எடுபடுகிறது. இந்திய அணிக்கு நல்ல பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

அடுத்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இதேபோன்று அணுகுமுறையை கையாள உள்ளோம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் பாகிஸ்தான் அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்திவிட்டு இந்தியாவிற்கு வருகிறார்கள். அதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்றார்.