இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு இந்தப் பந்தை மட்டுமே வீச அறிவுறுத்தினர் ; நான் இந்த திட்டத்தை வைத்து தான் விக்கெட் வீழ்துவேன் – ரகசியத்தைக் கூறிய ஹர்ஷல் பட்டேல்

0
160
Harshal Patel RCB

நேற்று ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில், 49வது போட்டியாக, சென்னை பெங்களூரு அணிகளுக்கு இடையே, மகாராஷ்ட்ராவின் புனே மைதானத்தில் நடந்த போட்டி, இரு அணிகளுக்குமே வாழ்வா? சாவா என்கின்ற அளவிலான போட்டிதான். இந்த ஆட்டத்தில் வென்றால்தான் சென்னை அணி ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பில் தொடரமுடியும், பெங்களூர் இந்த ஆட்டத்தில் தோற்றால் அடுத்து வரும் மூன்று ஆட்டங்களிலும் வெல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.

நேற்றைய புனே ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் நின்றும், சுழன்றும், எகிறும் வந்தது. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகத்தைத் தரும். முதலில் டாஸில் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பந்துவீச்சை தேர்வுசெய்தார். வேகப்பந்து வீச்சு எடுபடாத நிலையில், ஸ்பின்னர் மொயீன்அலி வந்து பாஃப், விராட்கோலியை வெளியேற்றினார். அடுத்து பட்டிதார், லோம்ரர் அணியை மீட்க, தினேஷ் கார்த்திக் இறுதியில் அதிரடி காட்ட, இருபது ஓவர்கள் முடிவில் 173 ரன்களை எடுத்தது பெங்களூர் அணி.

- Advertisement -

அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் நல்ல துவக்கத்தைத் தந்தாலும், அதை அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆடுகளத்தைக் கணித்திருந்தும் தவறாக விளையாடி, விக்கெட்டுகளை விட்டு ஆட்டத்தையும் இழந்துவிட்டார்கள். பார்ட் டைமர் மேக்ஸ்வெல்லுக்கு விக்கெட்டுகளை தரும் வகையில் ஆடி அணியை தோல்வி பாதைக்கும் அழைத்துச் சென்று விட்டார்கள். குறிப்பாக ஹர்சல் படேல் இறுதி நேரத்தில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது பந்துவீச்சுதான் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்தது. ஆட்டநாயகன் விருதையும் அவரே வென்றார்.

ஆட்டநாயகன் விருது பெறும் நிகழ்வில் ஆட்டம் குறித்து பேசிய அவர் “நான் திரும்ப வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னிடம் கடைசிநேரத்தில் லெப்ட்-ஹேன்ட்டர்களுக்கு தொலைவான தூரத்தில் இருக்கும் பகுதிகளில் அடிக்குமாறு, ஆப்-ஸ்டம்ப் வெளியே வைட் லைனில் வீசுமாறு கேட்டுக்கொள்ளப் பட்டது. நான் அந்த லைனில் ஸ்லோ பால்களை வீசினேன். அது வெற்றியும் தந்தது. பேட்ஸ்மேன் ஸ்லோ பால்களுக்காக காத்திருக்கும்போது நான் கடினமான லென்த்தில் வேகமாக வீசுவேன். இந்தத் தொடரில் நான் மிகச்சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தொடரின் முடிவில் சிறப்பாக முடிப்பேன்” என்று கூறினார்!