நான் 2 ஆண்டுகளுக்கு முன் 117 கிலோ எடையில் இருந்தேன் ; பல முறை உடற்பயிற்சி தேர்வில் தோல்வியும் அடைந்தேன் – கடந்து வந்த பாதையை விவரிக்கும் மகேஷ் தீக்சனா

0
460
Maheesh Theekshana CSK

நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் இரசிகர்களை மிகப்பெரிய ஏமாற்றமடைய வைத்த விசயமென்றால், அது மும்பை இன்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் மோசமான சரிவுகள்தான். இந்த இரு அணிகளுமே ஏறக்குறைய ப்ளே-ஆப்ஸ் வாய்பிலிருந்து வெளியேறிவிட்டன என்றே கூறலாம். இதில் மும்பை இன்டியன்ஸ் அணி உறுதியாகவே ப்ளேஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறிவிட்டது.

இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது, ஸ்விங் பாஸ்ட் பவுலர் தீபக் சாஹரும், மணிக்கு 150 கி.மீ வேகத்தைத் தொடும் ஆடம் மில்னேவும் காயத்தால் விளையாட முடியாமல் வெளியேறியதுதான். ஏனென்றால் இந்த ஐ.பி.எல் தொடர் நடந்து வரும் மும்பை, நவிமும்பை, புனே மைதானங்களின் ஆடுகளங்கள் வேகத்திற்கும், மைதான சூழல்கள் ஸ்விங்கிற்கும் ஒத்துழைத்தன. ஆனால் இதைப் பயன்படுத்திக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சரியான பாஸ்ட் பவுலர்கள் இல்லை.

- Advertisement -

இந்த நிலையில்தான் பவுலிங் யூனிட்டின் பலகீனத்தையும், பவர்ப்ளே பவுலிங்கின் பலகீனத்தையும் குறைக்கும் விதமாக சென்னை அணி, இலங்கையின் மர்ம சுழலர் தீக்சனாவை கொண்டுவந்தது. இவர் அணிக்குள் வந்ததும்தான், சென்னை அணி பவர்-ப்ளேவில் விக்கெட்டுகளை கைப்பற்ற ஆரம்பித்தது, பவுலிங் யூனிட்டின் பலகீனமும் ஓரளவு குறைந்தது. இதுவரை இந்த ஐ.பி.எல் தொடரில் மொத்தம் எட்டு ஆட்டங்களில் ஆடியிருக்கும் இவர், 12 விக்கெட்டுகளை, 19.75 என்ற சராசரியோடு, 7.41 என்ற எகானமியில் கைப்பற்றி இருக்கிறார்.

இவர் தான் இளமைக் காலங்களில் கிரிக்கெட் விளையாடும் பொழுது சந்தித்த கடினமான நேரங்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் “நான் 2018-19ல் இலங்கை அன்டர் 19 அணியில் இருந்தேன். ஆனால் நான் சிலமுறை உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்ததால் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மூன்று நாள் போட்டிகளில் பத்து ஆட்டங்களுக்கு தண்ணீர் பாட்டில்களை சுமந்தேன். இனி உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்தால் நான் மீண்டும் தண்ணீர் பாட்டில்ளை சுமக்க வேண்டும் என்று புரிந்திருந்தேன். அப்போது நான் 117 கிலோ இருந்தேன். ஆனால் 2020ல் நான் கடுமையாக உழைத்து, அணிக்குள் திரும்பி வந்ததோடு, 2021ல் இலங்கை தேசிய அணிக்காக அறிமுகமானதோடு, அதே ஆண்டு உலகக்கோப்பைக்கான இலங்கை அணியிலும் இடம் பெற்றேன். இப்போது உங்கள் முன்னாலும் இருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்!