இந்த ஒரு பிளேயரை இந்தியா ஜெர்சியில் சீக்கிரம் பார்க்க வேண்டும் – சேவாக் பேட்டி!

0
6861

மும்பையை சேர்ந்த இளம் வீரரை விரைவில் இந்திய ஜெர்சியில் பார்க்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார் வீரேந்திர சேவாக்.

மும்பையைச் சேர்ந்த இளம் துவக்க வீரர் பிரித்வி ஷா, 2018ம் ஆண்டு அண்டர் 19 இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து உலககோப்பையை பெற்று தந்திருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இவர், இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் விளையாடி 340 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 190 ரன்கள் அடித்திருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக 2020 ஆம் ஆண்டு விளையாடினார்.

அதன் பிறகு இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. நடுவில் ஊக்கமருந்து உட்கொண்டதாக எழுந்த புகார் அடிப்படையில் விசாரிக்கப்பட்டதில், அவர் எடுத்துக் கொண்ட மருந்தில் தடை செய்யப்பட்ட சில பொருட்கள் இருந்ததால், அவருக்கு 10 மாதகாலம் தடை விதித்தது பிசிசிஐ.

பின்னர் அணியில் இடம் கிடைத்தும் தக்க வைத்துக் கொள்ளாமல் சொற்ப ரன்ளுக்கு ஆட்டம் இழந்ததால், அடுத்தடுத்த வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் மாற்றியமைக்கும் விதமாக உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சையது முஸ்தக் அலி தொடரில் 10 இன்னிங்சில் 332 ரன்கள் அடித்திருந்தார். குறிப்பாக இவரது ஸ்ட்ரைக் ரேட் 182 ஆகும். அதிரடியான துவக்கத்தை அணிக்காக கொடுத்து வரும் இவருக்கு ஆதரவாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்தர் சேவாக்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காததை குறிப்பிட்ட பேசிய சேவாக், “பிரித்வி ஷாவை நான் நியூசிலாந்து தொடரில் பார்க்க வேண்டும். ஏன் அவருக்கு டி20 அல்லது ஒருநாள் தொடரில் இடம் கொடுக்கவில்லை என்று புரியவில்லை.

பிசிசிஐ தேர்வு குழுவின் கவனத்தில் இவரும் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் ஏன் வாய்ப்புகள் கொடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்ற கேள்விகள் நான் மட்டுமல்ல பலரும் எழுப்புகின்றனர்.

இவரை இந்திய ஜெர்சியில் விரைவில் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். துவக்க வீரராக களமிறங்கி 150 ஸ்ட்ரைக் ரேட்டுக்கும் அதிகமாக விளையாடுகிறார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியான வீரராக இவர் இருப்பார்.

தற்போது இருக்கும் வீரர்கள திணறும்பொழுது இவரை பயன்படுத்தலாம். நடந்துமுடிந்த உலகக்கோப்பை அதற்கு உதாரணம்.

மேலும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய மைதானங்களை இவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் விளையாடியது கூடுதல் பலமாக இருக்கும் என்பதால் இவரை நிச்சயம் அணியில் வைத்துக்கொள்ள வேண்டும்.” என்று கருத்து தெரிவித்தார்.