பத்து ரூபாய் பிஸ்கட் வாங்கி உண்பதற்காக பல மைல்கள் நடந்த கதை – குமார் கார்த்திகேயா கடந்து வந்த கடினமான பாதை

0
229
Kumar Karthikeya Mumbai Indians

மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய வரவாக குமார் கார்த்திகேயா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய விளையாடினார். 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றி 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ரிஸ்ட்(மணிக்கட்டு) ஸ்பின் பந்து வீச்சு மிகவும் கடினமான ஒன்று. அதை மிக சுலபமாகவே குமார் கையாண்டு வருகிறார்.

அவரது பந்துவீச்சை கண்ட நியூசிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர ஸ்பின் பந்து வீச்சாளரான டானியல் வெட்டோரி அவரை வெகுவாகப் பாராட்டி இருந்தார். எந்தவித லூஸ் பந்தும் அவர் வீசவில்லை என்று கூட கூறியிருந்தார்.

குமார் கார்த்திகேயா கடந்து வந்த கடினமான பாதை

குமார் கார்த்திகேயா கடந்து வந்த பாதை குறித்து அவருடைய பயிற்சியாளரான பரத்வாஜ் ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். குமார் கார்த்திகேயா நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இரவு தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு பின்னர் 80 கிலோ மீட்டர் பயணம் செய்து காலையில் கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சி எடுப்பார். நான் ஒருமுறை அவரிடம் எதற்காக இவ்வளவு தூரம் வீண் அலைச்சல் என்று கேட்டேன்.

அப்பொழுதுதான் அவர் இரவு தொழிற்சாலையில் வேலை செய்துவிட்டு காலையில் கிரிக்கெட் பயிற்சி எடுக்க வருவது எனக்கு தெரியவந்தது. தொழிற்சாலைக்கு பக்கத்தில் அவர் சக தொழிலாளர்களுடன் ரூமை ஷேர் செய்து தங்கியிருக்கிறார். அவர் பல மைல்கள் நடந்து பத்து ரூபாயை சேமிப்பார். அந்த பத்து ரூபாயை வைத்து பிஸ்கட் வாங்கி உண்பதற்காக அவர் அவ்வாறு செய்வார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை கிரிக்கெட் அகடமியில் அவருக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டது. அப்பொழுது அவர் கண் கலங்கிவிட்டார்.அவர் அப்பொழுது ஒரு விஷயத்தைக் கூறினார். நான் மதிய உணவை உண்டு பல மாதங்கள் ஆகிவிட்டது என்று. நிறைய கடினமான விஷயங்களை கடந்து தான் தற்பொழுது இந்த நிலையில் அவர் நிற்கிறார். அவருடைய வளர்ச்சி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.

ஸ்பின் பந்து வீச்சில் மிகவும் கடினமான ஒன்று ரிஸ்ட் ஸ்பின் பந்து வீச்சுதான். அதையும் அவர் தற்பொழுது முறையாக கற்று இருக்கிறார். முதல் போட்டியின் முதல் ஓவரிலேயே அவர் சஞ்சு சாம்சனின் விக்கட்டை சாமர்த்தியமாக கைப்பற்றினார். இவ்வாறு குமார் கார்த்திகேயா குறித்து பெருமிதமாக அவருடைய பயிற்சியாளர் பரத்வாஜ் பேசியிருக்கிறார்.

குமார் கார்த்திகேயா எடுத்துக் கொண்ட அந்த உறுதிமொழி

குமார் கார்த்திகேயா சமீபத்தில் தான் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை கொடுத்து கூட பேசியிருந்தார்.”கடந்த 9 வருடங்களில் தான் ஒரு முறை கூட தனது வீட்டிற்கு சென்றது கிடையாது. கடைசியாக வீட்டிலிருந்து கிளம்பிய பொழுது, மனதில் ஒரு உறுதிமொழியை நான் எடுத்துக் கொண்டேன். இனி வாழ்க்கையில் ஏதாவது பெரிதாக சாதித்த பின்னரே, வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதே அந்த உறுதிமொழி.

இடையில் எனது பெற்றோர்கள் பலமுறை வீட்டிற்கு அழைத்தனர். அவர்கள் என்னை அழைத்த பொழுதும் எனது உறுதிமொழியை நான் மீற விரும்பவில்லை. ஆனால் தற்பொழுது நடப்பு ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தவுடன் நான் சந்தோசமாக எனது வீட்டிற்கு திரும்புவேன்”, என்று சந்தோஷத்துடன் குமார் கார்த்திகேயா கூறியுள்ளார்.