” தினேஷ் கார்த்திக் உள்ளே வர வேண்டும் என்பதற்காக நான் என் விக்கெட்டை கூட பறிகொடுக்க முயற்சித்தேன் ஆனால் நடந்தது வேறு ” – பெங்களூர் கேப்டன் டு பிளசிஸ்

0
8089
Dinesh Karthik and Faf du Plessis

நேற்று ஐ.பி.எல்-ன் டபுள் ஹெட்டர் போட்டியின் முதல் போட்டியில், ஹைதராபாத் அணியுடன் பெங்களூர் அணி பலப்பரீட்சை நடத்தி இருந்தது. இதற்கு முன்னர் இந்த ஐ.பி.எல் தொடரில் இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில், ஹைதராபாத் அணி பெங்களூர் அணியை 68 ரன்களுக்கு சுருட்டி வீசி எறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமலிருக்க, கடந்து இரு போட்டிகளாக ரன்களை வாரி வழங்கிய யான்சென்னுக்குப் பதிலாக பாரூக்கி ஹைதராபாத் அணிக்குள் வந்திருந்தார். பெங்களூர் அணி 11 போட்டிகளில் 6 வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்தது. ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் 5 வெற்றிகளோடு 10 புள்ளிகள் பெற்று, புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருந்தது.

நேற்றைய இந்த பகல் ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த பெங்களூர் அணி கேப்டன் பாஃப் பேட்டிங்கை தேர்வு செய்ய, விராட் கோலி இந்த முறையும் ஹைதராபாத் அணிக்கு எதிராக கோல்டன் டக் அடித்தார். இந்தத் தொடரில் இது மூன்றாவது கோல்டன் டக். ஆனால் அடுத்து வந்த பட்டிதார் கேப்டன் பாஃப் உடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த பெங்களூர் அணி நிமிர ஆரம்பித்தது. அரைசதத்தை நெருங்கி பட்டிதார் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மேக்ஸ்வெல்லின் ஆட்டமும், கேப்டன் பாஃப்பின் ஆட்டமும் மந்தமாக இருக்க பெங்களூர் அணி 175 ரன்களை எட்டுமா என்ற நிலை உருவானது. இந்த நேரத்தில் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக்க 8 பந்துகளில் நான்கு சிக்ஸர் ஒரு பவுண்டரி என குவிக்க, பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் 192 ரன்களை குவித்தது. பின்பு களமிறங்கிய ஹைதராபாத் அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 125 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோற்றது. பெங்களூர் அணி தரப்பில் ஹசரங்கா நான்கு ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

போட்டி முடிந்து ஆட்டம் குறித்துப் பேசிய பெங்களூர் அணி கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் “உண்மையைச் சொல்வதென்றால், தினேஷ் கார்த்திக் ஆட வரவேண்டுமென்று நான் அவுட்டாக முயற்சி செய்தேன். ரிடையர்ட் அவுட் ஆவது பற்றிக்கூட யோசித்தோம். அதற்குள் விக்கெட் போனதால் தினேஷ் கார்த்திக் வந்து விட்டார்” என்று சுவாரசியமான ஒரு தகவலை கூறியுள்ளார். உண்மையில் தினேஷ் கார்த்திக் ஆட வராமல் போயிருந்தால், பெங்களூர் அணி நிச்சயமாக 192 ரன்களை குவித்திருக்காது!