ஆரஞ்சு கேப்பை பெறுவது தான் ஒரே இலக்கு – சென்னை சூப்பர் கிங்ஸ் ஒப்பனர் ஃபேப் டூ பிளசிஸ் கருத்து

0
417
Faf du Plessis Orange Cap

இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்கா நாட்டில் டெஸ்ட் தொடரை முதன்முறையாக வெல்வதற்காக காத்திருக்கிறது. அதற்காக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கேப்டன் விராட் கோலியின் தலைமையிலான அணி மிகச்சிறந்த பந்து வீச்சை உடையதாக உள்ளதால் இந்த முறை இந்தியா தொடரை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடர் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தாலும் எப்போதும்போல தற்போதே அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் இப்போது வந்துவிட்டது. வரும் பிப்ரவரி மாதம் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடக்க இருப்பதால் எந்த வீரர் எந்தெந்த அணிகளுக்கு விளையாட போகிறார்கள் என்பதை அறிய பலர் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டுப்ளசிஸ் ஐபிஎல் தொடர் குறித்து பேசியுள்ளார். பல ஆண்டு காலமாக சென்னை அணியில் அங்கம் வகித்து வரும் இவரை நிச்சயமாக ஏலத்தில் மீண்டும் சென்னை அணி எடுக்க முயற்சி செய்யும். காரணம் பல முக்கிய போட்டிகளில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வென்று கொடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் குவாலிபயர் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத நிலையில் இருந்து சென்னை அணிக்காக இவர் தனியாக போராடி வென்று கொடுத்தார். தற்போது ஐபிஎல் தொடரில் தன்னுடைய குறிக்கோள் பற்றி பேசியுள்ள இவர் அதிக ரன்கள் எடுத்த வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை பெருவது தான் தன்னுடைய இலக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது ஆரஞ்சு தொப்பியை பெறுவது தான் என்னுடைய முக்கிய இலக்காக இருக்கும் என்று கூறியுள்ளார். அதிக அழுத்தம் நிறைந்த ஆட்டத்தில் தான் சிறப்பான பேட்டிங் வெளிப்படும் என்றும் இவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு இறுதிப் போட்டியின்போது 40 ரன்கள் எடுத்தாலே அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடலாம் என்று இருந்த போதும் தான் 40 ரன்களுக்கு முயற்சிக்காமல் 83 ரன்கள் எடுத்து முதலிடம் பிடிக்க நினைத்ததாக கூறியுள்ளார். அப்படியிருந்தும் சிறிய வித்தியாசத்தில் சக வீரர் கெய்க்வாடிடம் ஆரஞ்சு தொப்பியை இழந்தார். ஆனால் இந்த முறை இவர் இருக்கும் உத்வேகத்தைப் பார்த்தால் நிச்சயம் ஆரஞ்சு தொப்பியை பெற்று விடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.