ரோகித், விராட் கோலியோட பேட்டிங் இல்லை; எனக்கு பிடித்தது இந்த இந்திய வீரரோட பேட்டிங் ஸ்டைல்! – பாக்., நட்சத்திரம் ரிஸ்வான் பகீர் பேட்டி!

0
10408

இந்திய வீரர் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் முகமது ரிஸ்வான்.

நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் விளையாடி வரும் முத்தரப்பு டி20 தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரு அணிகளும் மோதின.

முதல் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்தது. பயங்கரமான பார்மில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் முகமது ரிஸ்வான் இந்த போட்டியிலும் அரைசதம் அடித்தார். 50 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 78 ரன்கள் அடித்திருந்தார்.

அடுத்ததாக பேட்டிங் செய்த வங்கதேச அணி இலக்கை எட்ட முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ரிஸ்வான், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய 6 போட்டிகளில் நான்கு அரைசதங்களை அடித்திருந்தார். அதே பார்மை தற்போது இந்த முத்தரப்பு டி20 தொடரிலும் தொடர்கிறார். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 78 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ரிஸ்வான் டி20 தரவரிசையில் தனக்கு போட்டியாக இருந்து வரும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் பற்றி பேசினார்.

பத்திரிகையாளர் ஒருவர், “டி20 தரவரிசையில் சூரியகுமார் யாதவ் உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறார். உங்களுக்கும் அவருக்கும் 16 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என கேட்டதற்கு, “சூரியகுமார் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. மிகச் சிறந்த வீரர். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார். அவர் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.” என்று எந்தவித தயக்கமும் இன்றி மனம் திறந்து பேசினார்.

பரம எதிரி அணியாக பார்க்கப்படும் இந்திய அணியின் ஒரு வீரரை, பாகிஸ்தான் வீரர் ஒருவர் இப்படி எந்தவித தயக்கமும் என்று பாராட்டுவது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.