10-12 வருஷமா இதுதான் விராட்கோலியை டாப்ல வச்சிருக்கு- கபில்தேவ் கருத்து!

0
78

விராட் கோலியின் பேட்டிங் மற்றும் அவரது பார்ம் இரண்டும் குறித்து சமீபத்திய நேர்காணலில் லெஜெண்டரி கிரிக்கெட் வீரர் கபில்தேவ் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணியின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் என்று விராட் கோலியை தயக்கம் இன்றி கூறலாம். அவரது பேட்டிங் புள்ளி விவரங்கள் அதனை உறுதி செய்கிறது. அதிக ரன்கள் மற்றும் சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் விராட் கோலி இருப்பார். இந்திய அணியின் கேப்டனாகவும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த அவர், பல வெற்றிகளை குவித்து அதிலும் சாதனைகளை படைத்திருக்கிறார்.2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு தனது அனைத்துவித கேப்டன் பொறுப்பில் இருந்தும் விராட் கோலி விலகிக் கொண்டார்.

- Advertisement -

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு விராட் கோலியின் பேட்டிங் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்களை அவர் சந்தித்து வருகிறார். சமீப காலமாக விராட் கோலிக்கு அவ்வபோது இந்திய அணியில் இருந்து ஓய்வும் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் முழுவதும் அவர் பேட்டிங் விளையாடவில்லை. இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு உள்ளானார் என்பதைப் பற்றி மனம் திறந்து விராட் கோலி தனது நேர்காணலில் பேசினார்.

இந்நிலையில் விராட் கோலிக்கு நம்பிக்கை தரும் விதமாக இந்திய அணியின் லெஜெண்ட்ரி வீரர் கபில் தேவ் கருத்து தெரிவித்து, சில அறிவுரைகளையும் கூறி இருக்கிறார். “விராட் கோலியிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரது ஆக்ரோஷம். அதுதான் அவரை கடந்த 10-12 வருடங்களாக உச்சத்தில் வைத்திருக்கிறது. அதை ஒருபோதும் அவர் விட்டு விடக்கூடாது. எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் அனைத்து போட்டிகளிலும் ரன்கள் அடிக்க முடியாது. மோசமான காலம் அப்படியே இருத்துவிடும் என்பதும் கிடையாது. அவ்வபோது சரிவுகள் வருவது இயல்பு. நிச்சயம் விராட் கோலி போன்ற வீரர் மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்திற்கு திரும்புவார். இன்னும் சில வருடங்கள் இந்திய அணிக்கு பங்களிப்பை கொடுப்பார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடிய போது நான் கவனித்தேன். முதல் ஓவரில் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பித்தார். அதன் பிறகு சில ஷாட்டுகள் மிகச் சிறப்பாக விளையாடினார். அதிலிருந்து அவர் நம்பிக்கையை பெற்றுக் கொண்டார் என நானும் உணர்ந்தேன். நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் அபாரமாக விளையாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்புவார்.” என்று நம்பிக்கை தரும் விதமாக பேசினார்.

- Advertisement -